டைபாய்டை வராமல் தடுப்பது எப்படி?
பாக்டீரியாவானது உணவுப் பொருள்கள் மற்றும் தண்ணீர் மூலம் குழந்தைகள் முதல் வயதானவர் கள் வரை அனைவரையும் பாதித்து வயிற்றுப்போக்கு முதல் டைபாய்டு காய்ச்சல் வரை பல நோய்களை உண்டு பண்ணுகிறது.
காய்ச்சல் ஏற்பட்டு 10 முதல் 14 நாள்களில் பசியின்மை, லேசான தலைவலி, வயிற்றுவலி உடம்புவலி போன்ற அறி குறிகள் இருந்தால் அது டைபாய்டு ஆகும். நோயின் தீவிரம் அதிகமானால் காய்ச்சல் உக்கிரத்தை அடைந்து 104 டிகிரி என்ற அளவை எட்டும். பின்னர், அவ்வப்போது உச்ச அளவை எட்டும்.
குழந்தைகளில் மலச்சிக்கலும், சிறிய குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கும் இருக்கும். வயிற்றுப் போக்கானது சிறிய அளவில், பச்சை நிறத்தில் வயிற்று வலியுடன் இருக்கும். அடுத்த கட்டமாக கல்லீரல், மண்ணீரல் வீக்கம், வாய்நாற்றம், வாந்தி போன்றவை ஏற்படும். அரிதாக வயிற்றிலிருந்து ரத்தக்கசிவு, குடலில் ஓட்டை, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம்.
டைபாய்டு கிருமியானது மூளையையும் பாதிக்கும் இயல் புடையது. அரை நினைவிழப்பு, குழப்பநிலை முதல் கோமா நிலை வரை நோயாளி செல்லலாம். மூச்சுப்பிரச்சினை, இதய வீக்கம், இதயசெயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம்.
கர்ப்ப காலத்தில் டைபாய்டு காய்ச்சல் வந்தால் ஆரம்பநிலை எனில் கருக்கலைய வாய்ப்புள்ளது. பிந்தைய மாதங்கள் எனில் பிரசவம் முன்னதாகவே அதாவது குழந்தை முழுவதும் வளர்ச்சி அடையும் முன்பே நிகழ வாய்ப்புள்ளது.
டைபாய்டு நோய் தாக்கியவர்களின் சிலரது உடலில் அந்த கிருமிகள் முழுவதும் அழியாமல் ஓராண்டு வரை மலத்தில் வெளியேறி பிறருக்கு நோயை பரவச்செய்யும். உணவுப் பொருள்களை தயாரிப்பவர்கள் குறிப்பாக ஓட்டல்களில், மலம் கழிக்க சென்று பின் கையை சோப்பிட்டு கழுவாவிட்டால், உணவுப் பண்டங்கள் மூலம் அனைவருக்கும் நோயை கொடுத்துக் கொண்டிருப்பர். 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள், பெண் நோயாளிகள், வயதானவர்கள், ஈரலில் நோய் உடையவர்கள் இவ்வாறு நோயை அதிகமாக அடுத்தவருக்கு பரப்புகிறார்கள்.
தண்ணீர் மற்றும் உணவு மூலமே இந்நோய் பரவுகிறது. எனவே 140 டிகிரி அளவில் 15 நிமிடம் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது பலன் தரும். உணவு உண்பதற்கு முன்பு கைகளை சோப்பிட்டு கழுவுதல் வேண்டும். தெருவோர உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உணவு தயாரிக்கும் பணியில் இருப்பவர்களுக்கு நோய் கண்டறிதல் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் அவசியம்.
இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தடுப்பூசி உள்ளது. 2 வருடங்களுக்கு ஒருமுறை போட வேண்டும். 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மாத்திரை வடிவிலும் தடுப்பு மருந்து உள்ளது. நோய் வருமுன் தடுப்பு அவசியம். சுத்தமான உணவுப்பழக்கங்களை கையாண்டு நோயை தடுப்போம், நலமாக வாழ்வோம்.



