Breaking News

இன்று ஐ.பி.எல். இல் பெங்களூரு-ஐதராபாத் மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

வலுவான அணியாக வர்ணிக்கப்பட்டாலும் இதுவரை கோப்பையை வெல்ல முடியாத அணியாகவே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் விளங்கி இருக்கிறது. அந்த அணி 2009, 2011-ம் ஆண்டுகளில் அதிகபட்சமாக 2-வது இடத்தை பிடித்தது. அந்த அணியின் முன்னாள் சேர்மன் விஜய் மல்லையா மீதான கடன் பாக்கி சர்ச்சையை புறந்தள்ளி விட்டு கோப்பை கனவை நனவாக்க பெங்களூரு அணி நல்ல தொடக்கத்துடன் குறிவைக்கும் என்று நம்பலாம்.

பெங்களூரு அணியின் கேப்டனாக ஆக்ரோஷ நாயகன் விராட்கோலி இருக்கிறார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 273 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது பெற்ற விராட்கோலி அந்த அருமையான பார்மை இந்த ஆட்டத்திலும் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி அசுரன் கிறிஸ் கெய்ல், அபாயகரமான பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ், சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஷேன் வாட்சன் ஆகியோர் பெங்களூரு அணியின் பேட்டிங் கூட்டணியாக விளங்குகிறார்கள். இந்த புயல் வேக ஆட்டக்காரர்கள் களத்தில் நிலைத்து நின்று விட்டால் எதிரணி பவுலர்களின் கண்களில் கண்ணீர் வந்தாலும் வரலாம் எனலாம். ஷேன் வாட்சன் ரூ.9½ கோடிக்கு இந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தனது அதிக விலைக்கு தகுந்தபடி விளையாட வேண்டிய பொறுப்பு ஷேன் வாட்சனுக்கு இருக்கிறது.

ஆடம் மில்னே (நியூசிலாந்து) பெங்களூரு பந்து வீச்சு தாக்குதலில் முன்னிலை வகிப்பார். கனே ரிச்சர்ட்சன், ஹர்ஷல் பட்டேல், ஸ்ரீநாத் அர்விந்த், வருண் ஆரோன் ஆகிய சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் பத்ரீ இன்னும் முழுமையான தகுதியை எட்டாததால் அவர் முதல் சில ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் ஷிகர் தவான், டிரென்ட் பவுல்ட், இயான் மோர்கன், மோசஸ் ஹென்ரிக்ஸ், ஆஷிஷ் நெஹரா, கனே வில்லியம்சன், யுவராஜ்சிங், புவனேஸ்வர்குமார், முஸ்தாபிஜூர் ரகுமான், கரண்ஷர்மா போன்ற தரமான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பேட்டிங் ஏமாற்றம் அளித்த ஷிகர் தவான் நல்ல நிலைக்கு திரும்புவார் எனலாம். உலக கோப்பை போட்டியில் காலில் காயம் அடைந்த யுவராஜ்சிங் முதல் இரண்டு வாரங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஐதராபாத் அணிக்கு சிறிய பின்னடைவாக கருதப்படுகிறது.

உள்ளூரில் தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க பெங்களூரு அணி முயற்சிக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அந்த அணிக்கு பலம் சேர்க்கும். முதல் வெற்றியை ருசிக்க இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி மேக்ஸ். சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.