Breaking News

கட்சித் தலைமை விரும்பினால் ஜெ.வை எதிர்க்க தயார்

கட்சித்தலைமை கேட்டுக்கொண்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த எதிர்கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றன.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சி திமுகவிடம் பேசி வருகிறது. இதேபோல மயிலாடுதுறை, சிவகங்கை ஆகிய தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. 

ஆர்.கே.நகர் தொகுதியில் குஷ்புவை போட்டியிட வைக்கலாம் என காங்கிரஸ் கட்சி தலைமை விரும்புகிறது. எனவேதான் திமுகவிடம் ஆர்.கே.நகரை விட்டுத்தருமாறு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள குஷ்பு, 

கட்சித்தலைமைக் கேட்டுக்கொண்டால் தான் ஆர்.கே.நகரில் போட்டியிடத்தயார் என்று கூறியுள்ளார். வாய்ப்பு கொடுத்தால் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும், அதற்கான தான் பயப்படமாட்டேன் என்றும் குஷ்பு கூறியுள்ளார். 

சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தான் போட்டியிடப் போவதில்லை என்று அண்மையில் குஷ்பு தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். திமுக இன்னும் சற்று நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. அதில் ஆர். கே. நகரை தன் வசம் வைத்துக்கொள்ளுமா? அல்லது விட்டுக்கொடுக்குமா என்பது தெரியவரும். அவ்வாறு விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் குஷ்பு ஆர்.கே.நகரில் போட்டியிடுவது உறுதியாகிவிடும்.