'பார்த்திபன் கனவு' கரு.பழனியப்பனுடன் இணையும் மாதவன்?
மாதவன் அடுத்ததாக கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'இறுதிச்சுற்று' படத்தின் வெற்றியால் தமிழ்த் திரையுலகில் மாதவனின் மார்க்கெட் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது.
அடுத்ததாக மாதவன் நடிக்கும் படம்குறித்து அறிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 'பார்த்திபன் கனவு', 'பிரிவோம் சந்திப்போம்' படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் இயக்கத்தில் மாதவன் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கான கதையை முடித்துவிட்டு தற்போது வசனங்களை எழுதும் பணியில் பழனியப்பன் தீவிரம் காட்டி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.
மற்றொருபுறம் 'ஓரம்போ', 'வ குவாட்டர் கட்டிங்' படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் 'விக்ரம்-வேதா' படத்தில் நடிக்கவும் மாதவன் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'இறுதிச்சுற்று' படத்தின் திரைக்கதையை வடிவமைப்பதில் இயக்குநர் சுதாவுக்கு, புஷ்கர்-காயத்ரி உதவியதைப் பார்த்தே, 'விக்ரம்-வேதா'வில் மாதவன் நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறுகின்றனர். இது தவிர மலையாளத்தில் வெற்றிபெற்ற 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவனை நடிக்க வைக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
இதனால் தமிழில் மாதவன் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது