காத்தான்குடி கடற்கரை வீதி தற்காலிகமாக செப்பனிடப்பட்டதோடு, வீதி எச்சரிக்கை பதாதைகளும் நடப்பட்டன.
(என்டன்)
பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் கடற்கரை வீதி தற்காலிகமாக செப்பனிடப்பட்டதோடு, வீதி எச்சரிக்கை பதாதைகளும் நடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி கடற்கரை வீதியின் பல இடங்களிலும் குறிப்பாக கடற்கரை வீதியில் அமைந்துள்ள இரு பாலங்களுக்கு அன்மையிலும் வீதி சேதமடைந்து குன்றும் குழியுமாக உள்ளதனால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமன்றி மக்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்குகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கடந்த 25.04.2016ஆந்திகதி (திங்கட்கிழமை) குறித்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டதோடு, நகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் நேரில் வரவழைத்து நிலைமையினை சுட்டிக்காட்டி விரைவாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளை பரிமாறிக்கொண்டார்.
இதன்போது ஓரிரு தினங்களுக்குள் குறித்த சில பள்ளங்களை தற்காலிகமாக மூடிவிடுவதற்கும் பாலங்களுக்கு அண்மையிலுள்ள சரிவான பகுதிகளில் எச்சரிக்கை பதாதைகளை இடுவதற்குமான நடவடிக்கைகளை காத்தான்குடி நகர சபையினால் மேற்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைவாக கடந்த 28.04.2016ஆந்திகதி (வியாழக்கிழமை) கடற்கரை வீதியிலுள்ள பள்ளங்களை செப்பனிடும் பணிகள் இடம்பெற்றதோடு, மேலும் பாலங்களுக்கு அண்மையிலுள்ள சரிவான பகுதிகளுக்கு எச்சரிக்கை பட்டிகளும் (Warning Tape) இடப்பட்டன.
இதன் போது குறித்த பகுதிகளுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை செயலாளர், நகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சமூகமளித்திருந்தனர்.