Breaking News

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு விஜயம்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறந்தசெயற்பாடுகளுடைய பாடசாலையாக தெரிவு செய்யப்பட மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறேயீ ஹட்செஷன் இன்று விஜயத்தை மேற்கொண்டார்.

சுனாமியால் பாதிப்புக்குள்ளான இந்த பாடசாலை கல்வி அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிள்ளை நேயப் பாடசாலையாக உள்ளீர்க்கப்பட்டு அதன் உச்ச நிலையான செயற்பாடுகள் அவதானிக்கப்பட்ட  கல்வித் திணைக்களத்தினால் முதன்மைப் படுத்தப்பட்டது.

இதன் பின் பல அபிவிருத்தி செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் யுனிசெப் நிறுவனத்தினால் கையளிக்கப்பட்ட பல செயற்பாடுகள் இவ் வித்தியாலயத்தில் செயற்படுத்தப்பட்டு வெற்றியும் கண்டது. இதனை  கருத்தில் கொண்டு  யுனிசெப் நிறுவனத்தினால் இப்பாடாசாலைக்கு புதிய அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த செயல் திட்டங்களை இப்பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறேயீ  ஹட்செஷன் இன்று  இந்த   பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டார். விஜயத்தை மேற்கொண்ட உயர் ஸ்தானிகர் பாடசாலையின் கல்வி  சூழல், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் போன்றவற்றை பார்வையிட்டதுடன்  இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது மாணவர்களின் பெற்றோர்களினால் பாடசாலையின் தரம், பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற கல்வியுடனான பாடசாலையின் நவீன வசதிகள் போன்ற   விடயங்கள் தொடர்பாக சுட்டிக் காட்டப்பட்டதுடன் இதற்கான தீர்வினையும் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது .

பாடசாலை அதிபர் எ.ராசுவின்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் உளநல ஆலோசகர் சார்லோரி புலூண்டல், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இரண்டாம் நிலை செயலாளர் எட்வினா சிங்லயர், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், வலய கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி ஆலோசர் ஜெகநாதன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரினால் பாடசாலைக்கு நினைவு சின்னமும்  வழங்கி வைக்கப்பட்டது.
(என்டன்)