அமெரிக்காவில் முதன் முறையாக ஆண் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை நடத்தி டாக்டர்கள் சாதனை
அமெரிக்காவின் மசா சூசெட் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரை சேர்ந்தவர் தாமஸ் மேன்னிங் (64). வங்கி ஊழியராக பணிபுரிகிறார். புற்று நோய் காரணமாக இவரது ஆண் உறுப்பு அகற்றப்பட்டது. எனவே, அவர் மாற்று ஆண் உறுப்பு ஆபரேசன் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக பாஸ்டனில் உள்ள மசாசூட் பொது மருத்துவமனையை அணுகினார்.
அங்கு பிளாஸ்டிக் மற்றும் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்டிஸ் எல் செட்ரு லோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இறந்தவரிடம் இருந்து ஆண் உறுப்பு தானம் பெற்று இவருக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து இறந்தவரிடம் இருந்து ஆண் உறுப்பு தானம் பெறப்பட்டு கடந்த வாரம் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் நடத்தப்பட்டது. டாக்டர் கார்டிஸ் தலைமையிலான குழு சுமார் 15 மணி நேரம் இந்த ஆபரேசனை நடத்தினர். முடிவில் ஆபரேசன் வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.
தற்போது தாமஸ் மேன்னிங் காயம் ஆறி குணம் அடைந்து விட்டார். இன்னும் சில வாரங்களில் அவர் ஆபரேசன் செய்யப்பட்ட ஆண் உறுப்பு மூலம் சிறுநீர் கழிக்க முடியும் என்றும் சில மாதங்கள் கழித்து ‘செக்ஸ்’ வாழ்க்கையில் ஈடுபட முடியும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வகையான ஆபரேசன் செய்து கொள்ள ரூ.33.4 லட்சம் முதல் ரூ.50.1 லட்சம் வரை செலவாகும். உலகில் இதுவரை 2 ஆண் உறுப்பு மாற்று ஆபரேசன்கள் நடந்துள்ளன. அதில் 2006-ம் ஆண்டு சீனாவில் நடந்த ஆபரேசன் தோல்வி அடைந்தது. 2014-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஆபரேசன் வெற்றிகரமாக நடந்தது. அந்த நபர் ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆனார்.