வங்காள தேசத்தில் இஸ்லாத்தை அவமதிப்பு செய்ததாக இந்து ஆசிரியர் மீது தாக்குதல்
வங்காள தேசத்தில் டாக்கா அருகேயுள்ள பந்தர் உபாஷிலாவைச் சேர்ந்தவர் ஷியாமல் கன்டி பக்தா. இந்து மதத்தை சேர்ந்தவர். அங்குள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தவறு செய்த மாணவர் ஒருவரை வகுப்பறையில் அடித்து விட்டார். அது பற்றி அறிந்த அவனது உறவினர்கள் அங்குள்ள மசூதி ஒலிபெருக்கியில் ஆசிரியர் பக்தா இஸ்லாம் மதத்தை அவமதித்து பேசியதாக அறிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் பள்ளிக்கு வந்தது. பின்னர் ஆசிரியர் பக்தாவை அடித்து உதைத்தனர். தகவல் அறிந்ததும் அங்கு ஆளும் அவாமிலீக் கட்சியின் எம்.பி. சலீம் ஒஸ்மான் அங்கு வந்தார்.
அவர் ஆசிரியர் பக்தாவை, கும்பலாக வந்து தாக்கியவர்கள் முன்பு காதை பிடித்து பல தடவை தோப்புக்கரணம் போட வைத்தார். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆசிரியர் பக்தாவை காப்பாற்றினர். பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து ஆசிரியர் பக்தாவிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, தன் மீது கூறப்பட்ட மத அவ மதிப்பு புகாரை மறுத்தார். இச்சம்பவம் குறித்து 3 பேர் அடங்கிய குழு விசாரணைக்கு கல்வி மந்திரி நூருல் இஸ்லாம் நாகித் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தாக்குதல் நடத்திய கும்பலிடம் இருந்து ஆசிரியரை காப்பாற்றவே, அவரை தோப்பு கரணம் போட வைத்ததாக எம்.பி, சலீம் ஒஸ்மான் கூறினார்.