Breaking News

இந்தோனேசிய கடற்கரையில் படகில் தத்தளித்த 44 இலங்கை அகதிகள் தரையிறங்க அனுமதி...

இலங்கை தமிழ் அகதிகள் 44 பேர் ஆஸ்திரேலியா நாட்டில் தஞ்சமடைவதற்காக படகு மூலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புறப்பட்டனர். இதில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 15 பெண்கள், 9 குழந்தைகளும் அடங்குவர். கடந்த 11-ந் தேதி இந்தோனேசியா நாட்டின் சுமத்தீரா தீவு கடல் மார்க்கத்தில் அவர்கள் சென்ற படகின் இயந்திர கொளறினால் அவர்களின் பயணம் தடைப்பட்டது. 

நடுக்கடலில் படகில் தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகளை இந்தோனேசிய கடற்படையினர் மீட்டனர். ஆனால் அவர்களை ஏசெஹ் கடற்கரையோரம் தங்க வைத்து உதவிகள் வழங்கிய அதிகாரிகள், உரிய அனுமதி இல்லாததால் நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. நீண்ட நாட்கள் கடலில் பயணித்ததால் உடல்நலக்குறைவால் அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கும்படி அவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். 

அனுமதி மறுக்கப்பட்டதால் சிலர் படகில் இருந்து குதித்து கரைக்கு செல்ல முயன்றனர். அப்போது போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்து அவர்களை மீண்டும் படகிற்கு அனுப்பியுள்ளனர். அகதிகளை அனுமதிக்காத இந்த போக்கை சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டித்தது.

இந்நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு 44 அகதிகளையும் ஏசெஹ் கடற்கரையில் தரையிறங்க அனுமதிக்கும்படி அதிகாரிகளுக்கு துணை ஜனாதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அகதிகள் அனைவரும் கரைக்கு வருவதற்கு அதிகாரிகள் இன்று அனுமதி அளித்தனர். 

அதன்படி படகில் இருந்து கீழே இறங்கிய அவர்கள் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டு, அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டன.