Breaking News

குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்படுகிறதா? குடல்புழு தொல்லையாகவும் இருக்கலாம்.

குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம் என அம்மாக்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்குக் குழந்தைகளைப் பரவலாகப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சினை, குடல்புழுத் தொல்லை. சுயசுத்தம் குறைவதால் இது உண்டாகிறது. சுற்றுச்சூழல் சுகாதாரம் பெரிதும் மோசமாக இருக்கும் 

அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.

சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

 குடல்புழுக்களில் பரவலாக நம்மைப் பாதிப்பது உருண்டைப் புழுக்கள் (Round worms). இப்புழுக்கள் ஒரு நபரிடம் அதிகபட்சமாக 100 புழுக்கள்வரை காணப்படலாம். இப்புழுவால் பாதிக்கப்பட்டவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வரும். குமட்டல், வாந்தி, பசிக் குறைவு, அஜீரணம், வயிற்று உப்புசம் ஆகிய தொல்லைகள் தொடரும். சாப்பிடப் பிடிக்காது, உடல் மெலியும், உடல் எடை குறையும்.

இந்தப் புழுக்கள், புரதச் சத்தை விரும்பி சாப்பிடுவதால், பாதிக்கப்பட்ட நபருக்கு ‘புரதச் சத்து குறைவு நோய்’ வரும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். தோலில் அரிப்பு, தடிப்புகள் தோன்றலாம்; வறட்டு இருமல், இளைப்பு ஏற்படலாம். குடலில் ஒரே இடத்தில் நிறைய புழுக்கள் சேர்ந்துவிட்டால் குடல் அடைத்துக்கொள்வதும் உண்டு. 

இந்த குடல் புழுக்கள் பிரச்சனைக்கு குழந்தைகளுக்குத் திரவ மருந்தாக பல மருந்துகள் கிடைக்கின்றன. எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவர் யோசனைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 100 சதவீதம் அழிந்துவிடும். அதேவேளையில் கீழே சொல்லப்பட்டிருக்கும் சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால்தான் குடல்புழுக்கள் மீண்டும் மீண்டும் தொல்லை தராது.

தவிர்க்க என்ன வழி?

* சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும்.

* குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

* திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது.

* கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவ குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துங்கள்.

* சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.

* நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.

* குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.

* குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.

* எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

* ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

* சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

* காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

* நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.

* சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.

* காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்.

* வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். 

* தரமான கடைகளில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும்.

* மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்த பின் சாப்பிட வேண்டும்.

* வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.