Breaking News

அரை இறுதிக்கு அமெரிக்கா தகுதி;கோபா கால்பந்து

45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அமெரிக்கா, ஈக்வேடார், பெரு, கொலம்பியா, அர்ஜென்டினா, வெனிசிலா, மெக்சிகோ, சிலி ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

பிரேசில், உருகுவே, கோஸ்டாரிகா, பராகுவே, ஹைதி, ஜமைக்கா, பனாமா, பொலிவியா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

இன்று அதிகாலை நடந்த முதல் கால் இறுதி போட்டியில் அமெரிக்கா-ஈக்வேடார் அணிகள் மோதின.

உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் களம் இறங்கிய அமெரிக்க அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. 22-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டெம்சே கோல் அடித்தார்.

முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதி ஆட்டத்திலும் அமெரிக்காவில் ஆக்ரோஷம் தொடர்ந்தது. 65-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் சார்ட்ஸ் 2-வது கோலை அடித்தார்.

இதனால் பதில் கோல் அடிக்க ஈக்வேடார் அணி மல்லு கட்டியது. 74-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் அர்யோ கோல் அடித்தார். அதன்பின் ஈக்வேடார் அணி 2-வது கோலை அடிக்கவிடாமல் அமெரிக்க வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு நுழைந்தது.

அரை இறுதியில் அர்ஜெண்டினா அல்லது வெனிசூலா ஆகிய 2 அணிகளில் ஒன்றை அமெரிக்கா சந்திக்கிறது.