Breaking News

கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவை அதிரவைத்த துப்பாக்கிச் சூடு தாக்குதல்களின் தொகுப்பு

துப்பாக்கி கலாச்சாரத்துக்கு பேர்போன அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் பொது இடங்களில் நடத்தப்பட்ட நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதல்களின் தொகுப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் பொது இடங்களில் நடத்தப்பட்ட நடைபெற்ற  துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் பலநூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதை தடுப்பதற்கு துப்பாக்கி விற்பனை சட்டத்தில் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள நிலையிலும் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவை அதிரவைத்த துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகளை பின்நோக்கிப் பார்ப்போம்:-

* 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்ளிட்ட 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமுற்றனர்.

* 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒமாஹா, நெப்ரஸ்கா பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் புகுந்த 19 வயது ரோபர்ட் கவுகின்ஸ் என்பவர் சரமாரியாக சுட்டதில், அங்குள்ள கடை ஒன்றின் ஊழியர்கள் 6 பேர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் அந்த குற்றவாளியும் தற்கொலை செய்துகொண்டார்.

* 2008-ம் ஆண்டு வடக்கு இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள வகுப்பறை ஒன்றில் நுழைந்த ஸ்டீவ் காஸ்மியர்சியக்  என்பவர் தாம் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் அங்குள்ள மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், 5 மாணவர்கள் உயிரிழந்தனர், 16 பேர் படுகாயமடைந்தனர்.

* 2009-ம் ஆண்டு நியூயார்க் நகரில் அமைந்துள்ள குடியேற்ற மையம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின்போது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார், கொலைகாரனிடம் இருந்து தப்ப 37 பேர் கழிவறையில் மறைந்திருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

* 2009-ம் ஆண்டு கிலீன்  பகுதியில் ராணுவ உளவியல் மருத்துவர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்கிருந்த 13 ராணுவத்தினர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

* 2010-ம் ஆண்டு அலபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரியல் பேராசிரியர்கள் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்.

* 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மான்செஸ்டர், கனெக்டிகட் பகுதியில் கிட்டங்கி ஒன்றில் தொழிலாளர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் தலைவர் உள்ளிட்ட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* 2011-ம் ஆண்டு அரிசோனா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தின் வெளியே நின்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அங்கிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.

* 2011-ம்  ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சலூன் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.

* 2012-ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தின் ஆக்லாந்த் பகுதியில் அமைந்துள்ள மதம் தொடர்பான கல்லூரி ஒன்றில், முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* 2012-ம்  ஆண்டு ஜூலை மாதத்தில் திரையரங்கு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்கொலைக்கு முயன்ற கொலைகாரர் தப்பிப்பிழைத்து பின்னர் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

* 2012-ம்  ஆகஸ்ட் மாதத்தில் சீக்கியர் கோவிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் சரணடைய மறுப்பு தெரிவித்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு மேலும் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்தனர்.

* 2012-ம் செப்டம்பர் மாதத்தில் மின்னெபொலிஸ் பகுதியில் உள்ள தொழிற்பட்டறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தற்கொலை செய்து கொண்டார்.

* 2012-ம் டிசம்பர் மாதம் கனெக்டிகட் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்குள்ள 20 மாணவர்களும் 6 ஊழியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். கொலையாளி தனது தாயை கொலை செய்துவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டான்.

* 2013-ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் சாலையில் நடந்து சென்றவாறு ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். கொலைகாரனை போலீசார் சாமர்த்தியமாக சுட்டு வீழ்த்தினர்.

* 2013-ம்  ஆண்டு வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள கப்பற்படை தளத்தில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி தாக்குத்கலில் 12 பேர் உயிரிழந்தனர். முன்னாள் ஊழியரான அவர் அங்கேயே தற்கொலை செய்துகொண்டார்.

* 2014-ம் ஆண்டு, கில்லீன் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் 16 பேர் காயமடைந்தனர்.

* இதே ஆண்டில் கலிபோர்னியா பகுதியில் கல்லூரி மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 22 வயதான அந்த நபர் பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.

* மேரிஸ்வில்லி  பகுதியில் பாடசாலை உணவு விடுதியில் 15 வயது மாணவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

* 2015ம் ஆண்டு சார்லஸ்டன்  பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

* சட்டாங்கோ பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

* ரோஸ்பர்க்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் போலீசாருடன் நடந்த மோதலில் கொலையாளி கொல்லப்பட்டான்.

* சான்பெர்னாரிண்டோ பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

* ஓர்லாண்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். .