Breaking News

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகப்படுத்த

படிப்பதைப் பலமுறை சத்தமாகவோ, மனதுக்குள்ளாகவோ சொல்லிப் பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்லப்படும்போது, அவை தானாகவே மனதில் பதியும்.

படிக்கும் விஷயங்களை, சுவாரஸ்யமான பிற விஷயங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, உங்களுக்கு பிடித்த விஷயங்களின் முதல் எழுத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளலாம். ஒரு கேள்விக்கான பதிலில் நான்கு விசயங்கள் இருந்தால், அவற்றை ஒன்றோடொன்று "இன்டர்லிங்க்" செய்து படியுங்கள்.

குழந்தைகள் ஏ. பி. ஸி. டி.......ஈ. எஃப். ஜி என்று ராகமாக இழுத்துப் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள். அதேபோல நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை, உங்களுக்குப் பிடித்த ஒரு ராகமாக சொல்லிப் பாருங்கள். இரண்டு, மூன்று முறை பாடினால் நிச்சயம் மனப்பாடமாகிவிடும்.

முக்கியமான தகவல்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து ஒரு புது வார்த்தையாக்கி, அந்த வார்த்தையை ஞாபகம் வைத்துக்கொண்டால், அந்த எழுத்துக்களை வைத்தே எழுதிவிடலாம். தியரி படிக்கும் போது இம்முறையை பின்பற்றலாம்.

படிக்கும் விஷயங்களை சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். திருப்பிச் சொல்லிப் பார்க்கவும், நினைவில் வைத்துக் கொள்ளவும் எளிய வழி அது.

படிக்கும் இடம் ஒரே இடமாக இல்லாமல் சிறிது நேரம் தோட்டம், பின்னர் வராந்தா, மொட்டைமாடி, கிராமமாக இருந்தால் வயல்வரப்பு என்று இடங்களை மாற்றுங்கள். அந்த இடத்தில் படிக்கும் விஷயங்களை எழுதும்போது, "மொட்டை மாடில படிச்சோமே" என்று டக்கென்று நினைவில் வரும்.

அதே சமயத்தில் ஒரு பாடத்திற்கும் மற்றொரு பாடத்திற்கும் 10 நிமிடம் இடைவெளி தேவை. அப்போது ஒரு கப் காபி, டீ குடித்தோ, பாட்டுக் கேட்டோ ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

ஆர்வமில்லாமல் படிக்க உட்காரக் கூடாது. முழு ஈடுபாடுதான் நினைவில் வைத்துக் கொள்ள மிக உதவும். சில நிமிஷங்கள் உடற்பயிற்சி, மூளைக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் தியானமும் பலன் தரும்.