Breaking News

இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் போட்டியை திணிக்கவில்லை - ஐ.சி.சி. மறுப்பு

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த ஆண்டு (2017) ஜூன் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

இதற்கு 2015 செப்டம்பர் 30-ந் தேதி நிலவரப்படி டாப்-8 அணிகள் தகுதி பெற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகளும் ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 4-ந் தேதி எட்ஜ்பஸ்டரில் நடக்கிறது.

பரம எதிரிகளாக இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பார்கள்.

போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கு பதில் அளித்து ஐ.சி.சி. தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் கூறியதாவது:-

ஐ.சி.சி. போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதில் சந்தேகமில்லை. இந்த போட்டியை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள். இது போட்டி தொடருக்கு அற்புதமாக அமையும்.

ஆனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை திணிக்கவில்லை. ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றது தற்செயலாக நடந்தது என்றார்.

இந்த போட்டி தொடர் 18 நாட்கள் நடக்கிறது. இதை வைத்து தரவரிசை பட்டியலில் அணிகளின் வரிசை எண்ணை கூட்டினால் 18 என்று வரும் அணிகளை ஒரே பிரிவில் இடம் பெற வைத்து உள்ளனர். அதன்படி இந்தியா (2-வது இடம்), தென் ஆப்பிரிக்கா (3), இலங்கை (3), பாகிஸ்தான் (8) ஆகிய அணிகள் தரவரிசை எண்களை கூட்டினால் (2+3+5+8) 18 வரும்படி அமைந்துள்ளன.

இதே போல் ஆஸ்திரேலியா (1), நியூசிலாந்து (4), இங்கிலாந்து (6), வங்காளதேசம் (7) ஆகிய அணிகள் (1+4+6+7=18) ஒரே பிரிவில் இடம் பிடித்தன.