Breaking News

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகும் தீர்மானத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் வரவேற்ப்பு ஐரோப்பிய நாடுகளை தாக்க உத்தரவு

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுகிறது. அதனால் யூனியனில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பலம் 27 ஆக குறைந்து விட்டது. இதுகுறித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜிகாதி டெலிகிராம் என்ற தங்களது இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளனர்.

அதில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகியுள்ளது.

எனவே இந்த தருணத்தை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்த வேண்டும், குறிப்பாக பெர்வின், பிரசல்ஸ், நகரங்களில் அதிரடி தாக்குதல்கள் நடத்தி ஸ்தம்பிக்க செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் விடுமுறை கால விடுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தி உஷாராக இருக்க வேண்டும் என இங்கிலாந்து ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக இங்கிலாந்து மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைக்கு எதிராக இத்தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பெல்ஜியத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தீவிரவாத நடவடிக்கை தடுப்பு போலீசார் எச்சரித்துள்ளனர்.