Breaking News

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி ஆவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் பேரணி

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

இங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி நீண்டகாலமாகவே பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

ஆனால், இவ்விவகாரத்தில் பாராமுகமாக இருக்கும் ஆஸ்திரேலிய அரசின்மீது கனடா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிருப்தி கொண்டுள்ளன.

இதுதொடர்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களிடையே கருத்து கேட்கும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என பிரதமர் மால்கோம் டர்ன்புல் கூறிவருகிறார். கடந்த மார்ச் மாதம் சிட்னி நகரில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணியிலும் இவர் பங்கேற்றார்.

ஆனால், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியோ, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 100 நாட்களுக்குள் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 2-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெரா, சிட்னி, பெர்த், மெல்போர்ன், பிரிஸ்பேன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இன்று ஆயிரக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. 

‘எங்களுக்கும் சமஉரிமை’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்ற அவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அரசு விரைவாக சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

வானவில்லின் நிறத்திலான கொடியுடன் பேரணியில் வந்த சிலர், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் முன்னாள் பிரதமர் டோனி அபாட்-ஐப் போல் உடை அணிந்திருந்தனர்.