Breaking News

சுவாதியைக் கொலை செய்தது ராம்குமார் அல்ல…. முத்துக்குமார்!! வழக்கறிஞர் கிளப்பும் புது சர்ச்சை!!

இதுகுறித்து வழக்கறிஞர் ராமராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;

சுவாதி கொலையில் ராம்குமார்தான் குற்றவாளி என்ற அடிப்படையில், போலீசார் வழக்கை கையாண்டு வருகின்றனர். இந்தக் கொலை நடந்தவுடன், கொலையில் ஈடுபட்டது பிலால் மாலிக் என்பவர் என்று சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், எச்.ராஜா ஆகியோர் கருத்துக் கூறினர்.

பின்னர் ராம்குமார்தான் குற்றவாளி என்று சொல்லப்பட்டு, அவரை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் கைது செய்யும் படலத்தை அரங்கேற்றி, அப்போது அவர் ப்ளேடால் தற்கொலைக்கு முயன்றார் என்று போலீசார் ஜோடித்தனர்.

இப்போதும் அவர்தான் கொலையாளி என்ற ரீதியில் ஒரே திசையில் வழக்கை நடத்தி வருகின்றனர். அனைத்து ஊடகங்களிலும், ராம்குமாரின் படங்கள் வந்த நிலையில், சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தி கேலிக்குரிய விஷயமாக்கிய போலீசாரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதேபோல், புகைப்பட ஒப்பீடு என்று இப்போது தொடந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் இந்த வழக்கு குறித்து சில தனியார் உண்மை அறியும் குழுவினர் சிறந்த ஆய்வு நடத்தியுள்ளனர். தற்போது பிரபல பேஸ்புக் பதிவர் ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் சில சந்தேகங்களை கிளப்பியுள்ளார்.

இந்தக் கொலையில் ஈடுபட்டது ராம்குமார் அல்ல. தஞ்சையில் வசிக்கும் முத்துக்குமார் என்பவர்தான் ஈடுபட்டார், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். இது சாதி ஆணவக் கொலை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவரது பேஸ்புக் கருத்துகள் பல சந்தேகங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றன. எனவே, அவரது கருத்துப்படி விசாரணை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.