Breaking News

சிறைக் கைதிக்கு கிடைக்க விருக்கும் உலகின் மிக உயர்ந்த மனிதஉரிமை விருது !!

சீனாவில் வாழ்ந்துவரும் ‘உய்குர்’ இன முஸ்லிம்களில் ஒருபகுதியினர் தாங்கள் இருக்கும் பகுதியை தன்னாட்சி உரிமைபெற்ற சுதந்திர தனிநாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.

அதிகமாக உய்குர் முஸ்லிம்கள் வாழும் சிங்ஜியாங் பகுதியில் சீன ஹான் இனத்தவரின் குடியேற்றம் பெருகி வருவதை கண்டித்து இவர்கள் போராடி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் எல்லையோரம் பதுங்கியிருக்கும் இவர்கள் அவ்வப்போது சீனாவின் சிங்ஜியாங் பகுதியில் தீவிரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவின் ஹான் இனத்தவர்களுக்கு இணையாக இவர்களுக்கும் அதிகமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என உய்குர் இனத்தை சேர்ந்த பிரபல கல்வியாளரான ஈஹாம் டோட்டி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்.

தங்களது போராட்டத்தை வென்றெடுக்க உய்குர் இனமக்கள் வன்முறைப் பாதையை கைவிட்டு 
அரசுடன் சமரசமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என பேராசிரியரான வலியுறுத்தி வந்தார்.

இதற்கிடையே, நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக ஈஹாம் டோட்டியை இரண்டாண்டுகளுக்கு முன்னர் கைதுசெய்த சீன அரசு அவர்மீது தேசவிரோத குற்றத்தின்கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இருநாட்கள் மட்டுமே நடந்த இந்த வழக்கின் விசாரணையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டாண்டுகளாக அவர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘மனிதநேய விருது’ தேர்வுகுழு இந்த ஆண்டின் விருதுக்குரியவராக ஈஹாம் டோட்டியை தேர்ந்தெடுத்துள்ளது.

சர்வதேச பொதுமன்னிப்பு சபையான ’அம்னெஸ்ட்டி’ உள்பட பத்து அமைப்புகளை சேர்ந்தவர்களை கொண்ட தேர்வு குழுவினர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பட்டயம் வடிவிலான செய்திக்குறிப்பில், ‘சீனாவை சேர்ந்த உய்குர் இன கல்வியாளரான ஈஹாம் டோட்டி, பிரிவினைவாதம், வன்முறை ஆகியவற்றை தவிர்த்து, மதரீதியாகவும், கலாசாரரீதியாகவும் ஒடுக்கப்பட்ட உய்குர் இன மக்களின் மேம்பாட்டுக்கு தீர்வுகாணும் வகையில் புனர்வாழ்வு திட்டம் உருவாக்கவும் அவர் போராடி வந்தார்.

ஹான் மற்றும் உய்குர் இன மக்களிடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக உழைத்தமைக்காக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அமைதிக்கான சக்ஹாரோ விருதும் இந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.