Breaking News

பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க 'ஷைகுல் பலாஹ்' அப்துல்லாஹ் றஹ்மானியின் ஜனாஸா காத்தான்குடியில் நல்லடக்கம்.படங்கள்.

இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற இந்தியாவின் தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலானா மௌலவி 'ஷைகுல் பலாஹ்' மர்ஹூம் எம்.ஏ. அப்துல்லாஹ் றஹ்மானியின் ஜனாஸா பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க நேற்று 13 வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட ஷைகுல் பலாஹ்வின்; ஜனாஸா அங்கிருந்து காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு ஜனாஸா தொழுகைக்காக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அதே பள்ளிவாயல் மையவாடிக்கு ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா தொழுகையை ஷைகுல் பலாஹ்வின் புதல்வர் மௌலவி அல்ஹாபிழ் பறக்கத்துல்லாஹ் (பலாஹி) நடாத்த துஆப்பிராத்தனையை மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி) நடாத்தினார்.

ஜனாஸா தொழுகைக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றஊப் ஹக்கீம்,அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி றிஸ்வி முப்தி உட்பட உலமாக்கள் பலர் உரையாற்றினர்.

காத்தான்குடியில் என்றும் இல்லாதவாறு ஷைகுல் பலாஹ்வின் ஜனாஸா தொழுகையிலும் நல்லடக்கத்திலும் அமைச்சர் றஊப் ஹக்கீம், அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி றிஸ்வி முப்தி உட்பட நாட்டின் பல பாகங்களிலுமுள்ள அறபுக்கல்லூரிகளின் அதிபர்கள் உலமாக்கள் முக்கியஸ்தர்கள்,அரசியல் பிரமுகர்கள், என பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)