Breaking News

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து சட்ட விதிகள் உட்பட அடிப்படை முதலுதவி பயிற்சி தொடர்பான விஷேட செயலமர்வு-படங்கள்.

சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைய ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தொற்றா நோய் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் ஆரையம்பதி பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து சட்ட  விதிகள் உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்ட திட்டம் மற்றும் அடிப்படை முதலுதவி பயிற்சி தொடர்பான விஷேட செயலமர்வு ஒன்று 25-10-2016 இன்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.டாக்டர் பவித்திராவின் ஆலோசனையின் பேரில் இடம்பெற்ற மேற்படி விஷேட செயலமர்வு ஆரையம்பதி பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பிரிசோதகர் ஏ.எம்.எம்.பஸீர் தலைமையில் ஆரம்பமானது.

இதன் போது வீதி விபத்துக்களை தடுப்பது எவ்வாறு,முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து சட்ட  விதிகள் உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்ட திட்டம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் எம்.முஜாஹித்தினால் விரிவுரை வழங்கப்பட்டது.

இங்கு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அடிப்படை முதலுதவி பயிற்சி தொடர்பான விரிவுரையையும்,அதற்கான செயன்முறை பயிற்சியையும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ரி.வசந்தராஜாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

தொற்றா நோய் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற குறித்த செயலமர்வுக்கு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகள், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)