பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் முன்னாள் பிரதமர் வெற்றி
பிரான்ஸ்சில் சோஷலிச கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, பிரதமராக மேனுவல் வால்ஸ் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.
கடந்த 2012-ம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பிராங்கோயிஸ் ஹாலண்டேவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் பிரான்ஸ் நாட்டின் பிரதான கட்சிகளான ஆளும் சோஷலிச கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பழமைவாத கட்சிகளின் சார்பில் வரும் 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்களை அக்கட்சியின் பிரதிநிதிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
பழமைவாத கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர்கள் பிராங்கோயிஸ் ஃபில்லோன் மற்றும் அலைன் ஜுப்பே ஆகியோர் அக்கட்சி பிரதிநிதிகளிடம் ஆதரவு திரட்டி வந்தனர்.
இவர்களில் நம்பிக்கைக்குரிய நபரை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் 10,229 வாக்குச்சாவடிகளில் பழமைவாத கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் வாக்களித்திருந்தனர். பதிவான வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் எண்ணி, முடிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் பிராங்கோயிஸ் பில்லோன் சுமார் 70 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் இவர் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அலைன் ஜுப்பே தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது பிராங்கோயிஸ் பில்லோனை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.