Breaking News

உலகம் அழியும் நாள் கடிகாரத்தின்படி உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே மீதம் !!!

உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே இருக்கிறது என்று சொல்லுமளவுக்கு தற்போதைய பாதுகாப்பு சூழல் உள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

நவீன உலகில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , அணு ஆயுதப் போர் நடக்கும் சாத்தியக்கூறு போன்றவற்றால் உலகம் அழியக்கூடிய வாய்ப்புகளைக் கணக்கிட்டு, உலகிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், விஞ்ஞானிகள் ஒரு 'உலகம் அழியும் நாள்' காட்டும் கடிகாரம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.

அந்த கடிகாரத்தின் முட்கள் நள்ளிரவுக்கு நகர்ந்தால் உலகம் அழியும் என்று அர்த்தம்.

ஒவ்வொரு ஆண்டும் உலக பாதுகாப்பு சூழலின் தீவிரத்தன்மையை கணக்கிட்டு, இந்த கடிகாரத்தின் முட்களை விஞ்ஞானிகள் நகர்த்துகிறார்கள்.

இந்த ஆண்டு, அணு விஞ்ஞானிகள் என்ற இதழ், இந்த கடிகாரத்தின் நிமிடம் காட்டும் முள்ளை, நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் இருப்பதாக காட்டிய நிலையில் இருந்து இரண்டரை நிமிடங்களே இருப்பதாக நகர்த்தியிருக்கிறார்கள்.

அதாவது உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே இருக்கிறது என்று சொல்லுமளவுக்கு, உலகின் தற்போதைய பாதுகாப்பு சூழல் இருக்கிறதாம்!

இந்தக் கடிகாரத்தின் முட்கள் 'உலகம் அழியும் நள்ளிரவு' நேரத்தை இந்த அளவுக்கு நெருங்குமாறு காட்டப்படுவது இரண்டாவது முறையாகும்.

"போரை உருவாக்கும் செயலை எண்ணெய் ஊற்றி வளர்க்காமல், அமைதி" காக்கும்படி உலக தலைவர்களை அணு விஞ்ஞானிகள் இதழின் தலைவர் ரேச்சல் புரோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

பருவகால மாற்றம் பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கூற்றுகள், அமெரிக்காவின் அணு ஆயுத விரிவாக்கம், உளவு துறை நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்குதல் ஆகியவை உலகம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களின் சாத்தியக்கூறை உயர்த்தியிருப்பதாக அணு விஞ்ஞானிகளின் இதழ், அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைகளுக்கு பிறகு, 1953 ஆம் ஆண்டு உலக முடிவு நாளின் நள்ளிரவுக்கு இரண்டு நிமிடத்திற்கு முன்னால் இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள் குறிக்கப்பட்ட பிறகு, இந்த நிமிட முள் குறிப்பு மிகவும் நெருங்கி வந்திருப்பது இப்போது தான்.

உலக முடிவு நாள் கடிகாரத்தின் ஒரு நிமிடம் என்ற குறிப்பு உலகம் எவ்வளவுக்கு அதிகமாக பாதிக்கப்படலாம் என்பதை காட்டுகின்ற உருவகமாகும்.

இந்த அடையாள கருவி அணு விஞ்ஞானிகளின் இதழால் 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

அணு விஞ்ஞானிகளின் இதழ் 1945 ஆம் ஆண்டு சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முதலாவது அணு ஆயுதங்களை உருவாக்க உதவிய விஞ்ஞானிகள் குழுவால் நிறுவப்பட்டதாகும்.

இன்று இந்த குழுவில், உலக அளவிலுள்ள இயற்பியல் துறை வல்லுநர்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்த குழுவின் புரவலர்களோடு சேர்ந்து ஆலோசனை செய்து, இந்த கடிகார நேரத்தில் திருத்தம் செய்து, குறிப்பது பற்றி முடிவு செய்கின்றனர்.

இந்த குழுவின் புரவலர்களில் நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள் 15 பேர் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக முடிவு நாள் அடையாள கடிகாரத்தின் நிமிட குறிப்பு, இந்த பேரழிவு நடைபெறும் என்று அடையாளமாக கருதப்படும் நள்ளிரவுக்கு 3 நிமிடங்களுக்கு முன்னர் குறிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2017 ஆம் ஆண்டு ஏற்படும் உலக பேரழிவு ஆபத்து அதிகமாக இருக்கும் என்று அணு விஞ்ஞானிகளின் இதழ் தெரிவிக்கிறது. எனவே, இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள் அரை நிமிடம் அதிகரித்து குறிக்கப்பட்டுள்ளது.

"டொனால்டு டிரம்பால் தெரிவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதப் பயன்பாடு மற்றும் பரவலாக்கம் பற்றிய கவலை தரும் கருத்துக்களும், டிரம்ப் மற்றும் அவருடைய அமைச்சரவை நியமன உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் பருவகால மாற்றம் பற்றிய ஒட்டுமொத்த அறிவியல் கருத்தொற்றுமையில் நம்பிக்கையில்லாத கூற்றுகளும், உலக அளவில் தோன்றியுள்ள தீவிர தேசியவாதமும் இந்த குழுவின் தீர்மானத்தை பாதித்தன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணு ஒப்பந்தம், இணையவெளி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் போலிச் செய்திகளின் அதிகரிப்பு ஆகியவையும் இந்த குழுவின் தீர்மானத்தை பாதித்ததாக அணு விஞ்ஞானிகளின் இதழில் பட்டியலிடப்பட்டுள்ள பிற அம்சங்களாகும்.


1947 ஆம் ஆண்டு உலக முடிவு நாள் அடையாள கடிகாரம் உருவாக்கப்பட்டபோது, அந்த இறுதி நாளின் நள்ளிரவுக்கு 7 நிமிடங்களுக்கு முன்னதாக அதன் நிமிட முள் குறிக்கப்பட்டது. 

அதன் பிறகு உலக முடிவு நாளின் நள்ளிரவில் இருந்து 2 நிமிடங்கள் முன்பாக 1953 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டது முதல், 17 நிமிடங்கள் முன்பாக 1991 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டது வரை, மொத்தம் 22 முறை இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள் மாற்றி குறிக்கப்பட்டுள்ளது.

பருவகால மாற்றம், அணு ஆயுதப் பரவலாக்கம் ஆகியவற்றால் உலக அளவில் எழுந்த ஆபத்துக்களின் மத்தியில், 2015 ஆம் ஆண்டு இறுதி பேரழிவு நாளின் நள்ளிரவில் இருந்து 5 நிமிட இடைவெளியில் குறிக்கப்பட்டிருந்த இந்த கடிகாரத்தின் முள் 3 நிமிடமாக மாற்றி குறிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து 5 நிமிட இடைவெளியில் இந்த அடையாள கடிகார முள் குறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 1984 ஆம் ஆண்டு அமெரிக்க-சோவியத் உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட வேளையில், இந்த அடையாள கடிகார முள் உலக முடிவு நாளின் நள்ளிரவுக்கு 3 நிமிடங்களுக்கு முன்னால் வைத்து குறிக்கப்பட்டது.

இப்போது தீர்மானித்திருப்பதை போன்று, ஒரு நிமிடத்திற்கு குறைவான அளவு இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள்ளை மாற்றி குறிக்கும் தீர்மானம் இந்த குழுவால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படவில்லை..

டொனல்டு டிரம்ப் சமீபத்தில் தான் அதிபர் பொறுப்பை ஏற்றிருப்பதும், அவருடைய பல அமைச்சரவை நியமன உறுப்பினர்கள் இன்னும் அரசில் இணையாமல் இருப்பதும்தான் இந்த முடிவுக்கு காரணமாகும். 

இத் தகவல்கள் பிபிசி இணையதளத்தில் தெரிவிக்கபட்டு உள்ளது