Breaking News

சுவையான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி ரெடி !!!

சைவ உணவுப்பிரியர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி மிகவும் பிடிக்கும். இப்போது செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பிரியாணி அரிசி - 300 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை -1
சின்ன வெங்காயம் - 100 கிராம் 
தக்காளி - 100 கிராம் 
பச்சை மிளகாய் - 3 
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மஷ்ரூம் - 500 கிராம்
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செட்டிநாடு மசாலாத்தூள் :

பட்டை - 4
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
அன்னாசிப்பூ - 1
கறுப்பு ஏலக்காய் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை

செய்முறை :

* செட்டிநாடு மசாலாவுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்த கொள்ளவும். 

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பிரியாணி அரிசியை இரண்டு முறை அலசி, தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும். 

* அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், புதினா, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

* அனைத்து நன்றாக வதங்கியதும் அதில் செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 

* அடுத்து அதில் 600 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து விட்டு போட்டு அதனுடன், மஷ்ரூம், உப்பு சேர்த்து அரிசி முக்கால் பதம் வேக வரும் வரை வேக விடவும். தண்ணீர் வற்றியிருக்க வேண்டும். 

* இப்போது அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். தோசை கல்லின் மேல் சீரகச்சம்பா அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து தீயை சுத்தமாகக் குறைத்து மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும். 

* பிறகு மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.

* சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி ரெடி.