Breaking News

வைத்தியர்களால் மறந்து வயிற்றில் வைக்கப்பட்ட கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேற்றம்

வியட்நாம் நாட்டில் 54 வயது மிக்க முதியவர் ஒருவர் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தனர். 

அந்த ஸ்கேனில் அவரது வயிற்றின் இடது புறத்தில் கூர்மையான ஆயுதம் இருப்பது கண்டறியப்பட்டது. மீண்டும் சோதனை செய்ததில் கத்திரிக்கோல் இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. அந்த கத்திரிக்கோல் 15 செ.மீ நீளம் உடையது. 

இது குறித்து அந்த மனிதரிடம் விசாரித்த போது, 1998-ஆம் ஆண்டு பேக் கான் பொது மருத்துவமனையில் செய்து கொண்ட சிகிச்சையின் போது உள்ளே வைத்து இருக்கலாம் என்று கூறினார். 

ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவருக்கு அந்தக் கத்திரிக்கோலால் எந்த தொந்தரவும் இல்லை. கடந்த சில நாட்களாக தான் வயிற்று வலி இருந்து வந்தது. 

இந்த நிலையில், வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். வடக்கு வியட்நாமின் தாய் நிகுயென் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த சிகிச்சை நடைபெற்றது.

மருத்துவமனையில் உள்ள அவர் அடுத்த வாரம் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள வியட்நாம் சுகாதார துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.