Breaking News

ஒவ்வொரு குடிமகனும் உறுப்பு கொடையாளிதான் பிரான்சில் புதிய சட்டம் !

மனிதர்கள் இறந்தபின்னர் அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று, நோயுற்று உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தும் மருத்துவ சிகிச்சை தற்போது பிரபலமாகி உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை ‘இருக்கும்வரை ரத்ததானம் இறந்தபின் உறுப்புதானம்’ என்ற விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக சம்பந்தப்பட்ட நபர் அல்லது குடும்பத்தினர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே உறுப்பு தானம் சாத்தியமாகிறது. ஆனால், இந்த வழக்கத்திற்கு மாறாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் உறுப்பு தானம் செய்பவராக மாற்றியிருக்கிறது பிரான்ஸ் அரசு. 

ஸ்பெயின், ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்று பிரான்சிலும் உடல் உறுப்பு தானம் செய்யும் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய சட்டம் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இதன்படி, ஒருவர் தன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடிவெடுத்திருந்தால், அவர் இறந்த பின்னர் அதனை எளிதாக செயல்படுத்த முடியும். அதேசமயம், ‘உறுப்புக்களை தானம் செய்ய விருப்பம் இல்லை’ என்று விலகாத வரையில், குடிமக்கள் அனைவருமே உறுப்பு தானம் செய்பவராகவே கருதப்பட்டு இறந்தபின்னர் அவர்களின் உடல் உறுப்புகள் எடுக்கப்படும். 

உறுப்புக்களை தானம் செய்ய விருப்பம் இல்லை என்றால், அவர்கள் அதற்குரிய படிவத்தில் (மறுப்பு பதிவேடு அல்லது தேசிய நிராகரித்தல் பதிவேடு) தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்களின் உறுப்புக்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. 

எனவே, ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அவரது உடல் உறுப்புகளை நீக்குவது பற்றி முடிவெடுப்பதற்கு முன்பாக, மறுப்பு பதிவேட்டில் அவரது பெயர் இருக்கிறதா? என்று மருத்துவ குழுவினர் சரிபார்ப்பார்கள். 

இந்த பதிவேட்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.