Breaking News

சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறாமல் அரசியல் தீர்வு குறித்து பேசுவதில் பலனில்லை !!

சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காமல் அரசியல் தீர்வு குறித்து  பேசுவதால் எவ்வித பலனுமில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

சிறுபான்மை மக்களின் மனங்களில் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி இதுவரை தவறியுள்ளமை அப்பட்டமான உண்மை என கிழக்கு முதலமைச்சர் கூறினார்

ஏறாவூரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் இதனைக் கூறினார்,

சிறுபான்மை மக்கள் கடந்த ஆட்சிகாலத்திலிருந்து எதிர்நோக்கி வரும் இனவாதம் மற்றும்  மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்கு இதுவரை அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை எடுக்காமை மக்கள் மத்தியில் பாரிய ஏமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையை அவர்களுடன் கலந்துரையாடும் போது அறிந்து கொள்ள முடிவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்,

அது மாத்திரமன்றி கிழக்கின் பல பகுதிகளில் இன்னும் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினர் வசம் உள்ளமையும் அது குறித்து  அந்த பல போராட்டங்களை மக்கள் முன்னெடுத்த போதிலும் இதுவரை அரசாங்கத்தினால் சாதகமான பதில்கள் கிடைக்காமை அந்த மக்கள் மத்தியில் அதிருப்தியுணர்வை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ,குரங்குப்பாஞ்சான் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்களின் விவசாய நிலங்களும் குடியிருப்பு நிலங்களும் யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல கடந்த போதும் இன்னும் படையினர் வசமும் விடுவிக்கப்படாமல் இருப்பது  மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் கிழக்கில் ஏற்கனவே பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வறுமையை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்பதும் மக்களின் விவசாயக் காணிகள் விடுவிக்கப்படுவதன் ஊடாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப ஏதுவாக அமையும் என்பதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்,

அது மாத்திரமன்றி இன்று வில்பத்துப் பிரச்சினை  இனவாத நோக்கத்தில் திசை திருப்பப்பட்டுள்ளதால்  சிறுபான்மை முஸ்லிம் சமூகம்  மேலும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது என்பதுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இது குறித்த பேச்சுவார்த்தைகளை அரசாங்கத்துடன் முன்னெடுக்கவுள்ளதால் இந்தப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிட்டுமென நம்புவதாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்,

இவ்வாறான சிறுபான்மையினர் தொடர்த்தேச்சியாக எதிர்நோக்கி வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காலந்தாழ்த்தாமல் வழங்கப்படுவதன் ஊடாக சிறுபான்மை மக்கள் மத்தியில் அரசியல் தீர்வு குறித்த சாதகமான தோற்றப்பாட்டை உருவாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எது எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வை மையப்படுத்திய தீர்வொன்றை மாத்திரமே சிறுபான்மை சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாராகவுள்ளதுடன் அக்காவைக் காட்டி தங்கையை திருமணம் செய்து வைக்கும் வகையிலான தீர்வுத் திட்டங்களை நம்பி ஏமாறுவதற்கு  சிறுபான்மை சமூகம் இனியும் தயாரில்லை என்பதை பெரும்பான்மைக் கட்சிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,

இதுவரை இந்த தேசத்தின் நிரந்தர சமாதானத்துக்காக பெரும்பான்மை சமூகம் எந்த விதமான விட்டுக் கொடுப்புக்களை செய்யாத போதிலும் சிறுபான்மை சமூகங்கள் மாத்திரமே பல்வேறு விட்டுக் கொடுப்புக்களையும் இழப்புக்களையும் சந்தித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதுடன் ஆகவே இந்த தேசத்தின் நலனுக்காக இங்கு சிறுபான்மையாக வாழும் மக்களே பெருமளவு அர்ப்பணிப்புக்களை செய்துள்ளமை வரலாற்று நிதர்சனமாகும் என கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்,

ஆகவே  இலங்கை தேசத்தில் முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்வுத் திட்டமும் சிறுபான்மை மக்களை முதற்தரப் பிரஜைகளாகக் கருதி இந்த நாட்டின் அனைத்து உரிமைகளையும்  அனுபவவிக்க சமமான உரிமையுடையவர்கள் என்ற ரீதியில் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தினார்.