Breaking News

பட்டதாரிகளின் கண்ணீரில் குறுகிய அரசியல் சுயலாபங்களை ஈடேற்றிக் கொள்ள முயற்சிக்காதீர்கள்!!!

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லையென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

பல வருடங்கள் பல்வேறு இடர்களுக்கு மத்தியில்  தமது பட்டப்படிப்பை நிறைவு செய்து இன்று தொழில் வாய்ப்புக்காக ஆண்டுகள் பல காத்திருக்க நேரிடுவதும் அதற்காக போராட்ங்ஙகளை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளமை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாண பட்டதாரிகள்  தொடர்பில் இன்று திருகோணமலையில் உள்ள  முதலமைச்சர்  அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ்’ நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

ஏராளமான பெற்றோர் பல்வேறு கனவுகளை சுமந்த வண்ணம் தமது பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகின்ற நிலையில் அவர்கள் இன்று தொழில்களுக்காக அலையும் போது அந்தப்  பெற்றோரின் மனதிலுள்ள வலியையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடியும்,

ஆகவே பட்டதாரிகளுக்கு  விரைவில்  தீர்வொன்று கிடைத்து  அவர்களின் வாழ்வுக்கு இனிய காலம் பிறக்க வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

இன்று சிலர் நாம் தான் பட்டதாரிகளுக்கு  முதலாவது எதிரிகள் போலவும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும் நியமனங்களையும் நாம் தட்டிப் பறிப்பது  போலவும் அவர்களுக்கான தொழில்வாய்ப்புக்களை கைகளில் வைத்துக் கொண்டு கொடுக்காதிருப்பது போலவும் தமது அரசியல் சுயலாபத்துக்காக இன்று கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
நான் தயவு செய்து அவர்களிடம் ஒன்று கேட்கிறேன்.பல்வேறு துயர்களுடனும் கண்ணீருடனும்  நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து  போராடிவரும் பட்டதாரிகளின் தூய உண்மையான உணர்வில் உங்களது அரசியல் நோக்கங்களை கலந்து அவர்களது  கோரிக்கைகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.

உங்களுக்கு அரசியல்  செய்ய ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.எனவே அவற்றில் அரசியல் செய்யுங்கள்.பட்டதாரிகளின் வேதனைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள்.அவர்களின் கண்ணீரில் தமது அரசியல் சுயலாபங்களை ஈடேற்றிக் கொள்ள முயற்சிக்காதீர்கள்.

எங்கள்  ஆட்சி காலத்திற்குள் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு  தீர்வினைப்  பெற்றுக் கொடுக்க நாம்  எமது முழுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
நாங்கள் அரசியல் இலாபம்  தேடுவதற்கான அறிக்கைகளாகவோ வார்த்தைகளாகவோ இந்த விடயங்களை நாம் முன்வைக்கவில்லை.

நாமும் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மாகாணத்தில்  வாழ்பவர்கள் இன்று இவர்களை ஏமாற்றுவதற்காக வாக்குறுதிகளை  கூறிவிட்டு நாளை நாம் எப்படி இவர்களின் முகங்களில் விழிக்க முடியும்,

ஆகவே நாம் தௌிவாக ஒரு விடயத்தை  கூறிக் கொள்ள வேண்டும்.மாகாணங்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படும் வரை  பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டிவரும் என்பதை நாம் கூறியாக வேண்டும்.
நியமனங்களை வழங்குவது  ஆளணிகளை உருவாக்குவது  பட்டதாரிகளை உள்ளீர்ப்பது போன்றை அதிகாரங்கள்  மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுநர் வசமே உள்ளன என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆளுனரின் அதிகாரத்தின் கீழுள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவின் மூலமே நியமனங்கள் புதிய ஆளணிகளை உருவாக்கல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில்  கல்வி தொடர்பான 96 வீதமான அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருக்கின்றன.

இத்தனை தடங்கல்களுக்கும் மத்தியில் பல்வேறு  போராட்டங்களை முன்னெடுத்துதான்  நாம் எமது மாகாணத்தில் உள்ள  வெற்றிடங்களை நிரப்பி வருகின்றோம்.
இவற்றையெல்லாம் மீறி நாமாக எதேச்சாதிகாரமாக உங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கினால் உங்களுக்கு மாதாந்த சம்பளத்தை நாம் மத்திய அரசாங்கம் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டும்

இந்த நாட்டின் பிரஜைகளான உங்களுக்கு  தொழில் வழங்குவதற்கான அதிகாரங்களை வழங்காதவர்கள் உங்களுக்கு  சம்பளம் தர நிதி வழங்குவார்களா என்பதை நீங்களே உங்கள் மனசாட்சிளை தொட்டு  கேட்டுக் கொள்ளுங்கள்

\ஆகவே மாகாண சபைகளிடம் தான் எல்லாம் உள்ளன என்பது போன்றதொரு மாயை உருவாக்கி இந்த பிரச்சினைகளில் இருந்து யார் யாரோ குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றார்கள், நாம் தான் உங்கள் விமர்சனங்களுக்கும் ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களுக்கும் ஆளாகி வருகின்றோம்,

எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ள போதிலும் எங்கள் குரல்களை யாராலும் ஒடுக்க முடியாது எவர் எம்மை குறை கண்டாலும் பட்டதாரிகளுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்  கொடுக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
எங்களுக்கு நியமனங்களை வழங்கல்.புதிய ஆளணிகளை உருவாக்கல் மற்றும் வெற்றிடங்களை உருவாக்குவதற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் பட்சத்தில் பட்டதாரிகளின் பிரச்சினையை நாம் ஒரு நாளில் தீர்ப்போம் என்பதை நாம் உறுதியாகக் கூறுகின்றோம்

பல்வேறு  இடர்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலும் கடந்த இரண்டு மாதங்களில் 700க்கும் மேற்பட்டோருக்கு அரச நியமனங்களை வழங்கியிருக்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் கிழக்கு முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.