Breaking News

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

மாகாண ,மத்திய அரசாங்கம் தமக்கான வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலிறுத்தி நேற்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டவேலையற்ற பட்டதாரிகள் சாத்தவீக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்க முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற நிலையில் 1600க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளதாகவும் தங்களது எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது நியாயமான கோரிக்கைகளை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக புறந்தள்ளி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தேர்தல் காலங்கள் வரும்போது மட்டும் தங்களை நாடிவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடாத்தவேண்டிய நிலையேற்படும் எனவும் பட்டதாரிகள் எச்சரிக்க விடுத்துள்ளனர்.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம்   கலந்துரையாடினார். (லியோன்)