Breaking News

சதிகளை தகர்த்து உரிமைகளை வெல்ல தமிழ் முஸ்லிம் சமூகம் ஒன்றிணைய வேண்டும் !!!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு பிரதான சிறுபான்மை கட்சிகளையும் பிளவுபடுத்த திரைமறைவில் பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேற்றப்படுவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்

இந்த சதித்திட்டங்களுக்கு பின்னணியில்   உள்நாட்டு வௌிநாட்டு சக்திகள் பிரதான பாத்திரங்களை வகிப்பதாகவும் கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சுயதொழில் ஊக்குவிப்பு,பண்ணை தொழிற்துறையை ஊக்குவிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை முன்னெடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய அரச ஆடு மரபுரிமை  வள மேம்பாட்டு நிலையமொன்றினை மட்டக்களப்பு தும்பங்கேணி பகுதியில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.,

நாட்டில் அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான பணிகள் இடம்பெற்றுவரும் தீர்க்கமான கால கட்டத்தில் பெரும்பான்மையாக சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படும் இவ்விரு கட்சிகளினதும் வகிபாகம் மிக முக்கியமானது என்பதை யாரலும் மறுக்க முடியாது.

சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் விட்டுக் கொடுப்பின்றி செயற்படும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கவனத்தை திசை திருப்புவதற்கு உட்பூசல்களை ஏற்படுத்தவே இந்த சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சிறுபான்மையினருக்கு எதிரான சதித்திட்டங்களை முன்னெடுக்க சில சிறுபான்மை அரசியல்வாதிகளே குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் செயற்பாடுகளைக் கொண்டே அவர்களை மக்களுக்கு இலகுவில் அடையாளங்காண முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஆளுந்தரப்பு மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களில் பேரினவாத சக்திகளிடம் சிறுபான்மையினரையே காட்டிக் கொடுக்கும் சிறுபான்மையின அரசியல்வாதிகள் சமூகத்துக்கு சாபக்கேடாய் அமைந்துள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

எனவே சதிகார சக்திகள் குறித்து தமிழ் முஸ்லிம் மக்கள் தௌிவாக இருக்க வேண்டும் எனவும் சதிகளை தகர்க்க சிறுபான்மையின மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுபான்மையினர் பிளவுபட்டு இருக்கும் வரை அரசியல் தீர்வென்பது இரு தரப்புக்கும் கானல் நீராகவே அமைந்திருக்கும் என்பதல் கசப்புகளை களைந்து அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வொன்றிற்காய் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உடைப்பதற்கு சதி செய்பவர்கள் பகற்கனவு காண்கின்றார்கள் என்பதுடன் இந்தக் கட்சி தனி நபரின் கைகளில் தங்கியுள்ள கட்சியல்ல எனவும் அது ஆயிரக்கணக்கான போராளிகளின் கட்சியெனவும் எனவே கட்சியை உடைக்க நினைப்பவர்களுக்கு கட்சியின் போராளிகளே பாடம் புகட்டுவார்கள் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணாண்டோ,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபானி,கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி,மாகாண சபை உறுப்பினர்களாக ஞா.கிருஷ்ணபிள்ளை மற்றும் விந்தன் கனகரட்ணம் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.