Breaking News

அப்துல் கலாம் இலங்கை வருகிறார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று (25) இலங்கை வரவுள்ளார். இலங்கையில் நடைபெறும் சக்தி தொடர்பான செயலமர்வில் பங்கேற்பதற்காக வருகை தரவள்ள அவர் இம் மாதம் 27ஆம் திகதி மீண்டும் இந்தியா செல்லவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பெண் பேச்சாளர் மஹேஷினி கொலொன்னே தெரிவித்தார்.  வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத் தகவலை வெளியிட்டார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பெண் பேச்சாளர் மேலும் தகவல் தெரிவிக்கையில் மின்வலு மற்றும் சக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவகவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள முன்னாள் ஜனாதிபதி இங்கு தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 'இலங்கையின் எதிர்காலத் தலைவர்கள்' என்ற தலைப்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை (26) நடைபெறவுள்ள செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் அவர் 1,500 பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் முன்னிலையில் விசேட விரிவுரையொன்றினை நிகழ்த்தவுள்ளதாகவும் மஹேஷினி கொலொன்னே தெரிவித்தார்.
நமது நிருபர்