ஆத்திரக்காரர்களுக்கு ஜி - மெயிலில் 'லேட்' வசதி!
யாருக்காவது, காரசாரமாக மின்னஞ்சலை, 'டைப்' செய்து, 'செண்ட்' பட்டனை அமுக்கிய பின், 'அச்சச்சோ, தப்பு பண்ணிட்டோமே...' என, நாக்கை கடித்துக் கொள்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. 'ஜி - மெயில்' மின்னஞ்சல் சேவை, அத்தகைய அவசர புத்திக்காரர்களுக்காகவே, 'அண்டூ செண்ட்' என்ற வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதை பயன்படுத்தினால், 'செண்ட்' பட்டனை அழுத்திய பிறகும், அந்த காட்டமான மின்னஞ்சல் செல்லாமல், கணினியிலேயே தயங்கி நிற்கும். எந்த மின்னஞ்சலும், 5 முதல் 30 வினாடிகள் வரை, தாமதித்த பின் செல்லும்படி, ஜி - மெயிலுக்கு நீங்கள் உத்தரவிடலாம்.
இந்த வசதி உங்களுக்கு தேவை என்றால், ஜி - மெயிலை திறந்து கொள்ளுங்கள். பின், திரையின் வலது மேல் மூலையில் இருக்கும் பல் சக்கரம் போன்ற சின்னத்தை, 'க்ளிக்' செய்யுங்கள். அடுத்து, 'செட்டிங்ஸ்' என்று இருப்பதை தேர்வு செய்யுங்கள்.
அடுத்து, சற்று கீழே தேடிப் பார்த்தால், 'அண்டூ செண்ட்' என்பதற்கு அருகே உள்ள குட்டிப் பெட்டியை, 'டிக்' செய்யுங்கள். கூடவே உங்கள் மெயில் எத்தனை வினாடிகள் தாமதித்த பின் செல்ல வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுங்கள். அப்புறம், மறக்காமல் திரையின் அடிவாரத்தில் இருக்கும், 'சேவ் செட்டிங்க்ஸ்' என்ற பொத்தானை அழுத்தி, சேமியுங்கள்; அவ்வளவு தான்! ஆத்திரக்காரர்கள் இனி அமைதியடையலாம்.



