சாலை விபத்துக்களை தடுக்க சாம்சுங் இடம் இருந்து ஐடியா !!!
எமது நாட்டில் சாலை விபத்துக்களால் இறப்போரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. உலக அளவில், இதை விட பலமடங்கு வாகன விபத்து மரணங்கள் நிகழ்கின்றன. இதைத் தடுக்க, பல தொழில்நுட்ப நிறுவனங்கள், பலவித கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றன. 'சாம்சங்'கின் சமீபத்திய கண்டுபிடிப்பு, மிக எளிமையான, வித்தியாசமான ஒன்று. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில், நேருக்கு நேர் வாகனங்கள் மோதுவதை தடுக்க உதவும் என்கிறது, இந்த கண்டு பிடிப்பை உருவாக்கிய, சாம்சங்கின் அர்ஜென்டினா பிரிவு.
சாம்சங் உருவாக்கியுள்ள இந்த, 'பாதுகாப்பான லாரி'யின் முன் பகுதியிலுள்ள ஒரு கேமரா, எதிர்வரும் வாகனங்களை படம் பிடிக்கிறது. இந்த காட்சி, உடனுக்குடன் லாரியின் பின் பக்கம் உள்ள நான்கு, 'டிவி'களை சேர்த்து உருவாக்கப்பட்ட பெரிய திரையில் ஒளிபரப்பாகும். லாரிக்கு பின்னால் வரும் வாகன ஓட்டி, இதை பின்பற்றி, லாரியை முந்தலாமா, வேண்டாமா என்று கவனமாக முடிவெடுக்கலாம்.
சோதனை நிலையிலுள்ள இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த, அர்ஜென்டினாவிலுள்ள சாம்சங் நிறுவன அதிகாரிகள் அந்நாட்டு அரசிடமும், அரசு சாரா அமைப்புகளிடமும் பேசி வருகின்றனர். அதே சமயம், சாம்சங், 'டிவி' திரைகளை அதிகமாக விற்க இப்படி ஒரு தந்திரமா என்று நீங்கள் நினைப்பது தவிர்க்க முடியாதது.



