காதலிக்காக காதலியின் வேடத்தில் பரீட்சை எழுத சென்ற காதலன் கைது
இளைஞன் ஒருவன், தன் காதலிக்காக யுவதியை போல் ஆடைகளை அணிந்து பாடசாலை தவணைப்பரீட்சையில் தோற்றுவதற்கு போன விசித்திரமான சம்பவமொன்று கஸகஸ்தானில் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய 17 வயதான காதலி, இறுதி தவணைப்பரீட்சையில் தோற்றவிருந்துள்ளார். எனினும், பரீட்சையில் தோற்றுவதற்கு காதலி அச்சம் கொண்டிருந்துள்ளார். காதலி அச்சம் கொண்டிருந்ததை கண்ட காதலன், தன்னுடைய காதலி போல ஆடைகளை அணிந்துகொண்டு வேடமிட்டுக்கொண்டு பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை மண்டபத்துக்கு சென்றுள்ளார். பரீட்சை மண்டபத்துக்குள் நுழைவதற்கு முன்னர் அடையாள அட்டையை பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது அடையாள அட்டையில் இருந்த புகைப்படத்துக்கும் வந்திருந்த யுவதியின் முகத்துக்கும் வித்தியாசம் தென்பட்டுள்ளது. அதன்பிரகாரம் அந்த நபரை வேறொரு இடத்துக்கு அழைத்து சென்று இது தொடர்பில் விசாரிக்கையில் அந்நபரின் குரலில் இருந்து அவர், யுவதியல்ல இளைஞன் என்பது தெரியவந்துள்ளது. அந்த இளைஞனின் போலியான தலைமுடி, ஒப்பனையினால் அவர், கதைக்கும் வரையிலும் அவர் ஆண் என்பதை கண்டறியமுடியவில்லை என்று பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அந்த இளைஞன், தெரிவிக்கையில் இது புத்திசாதூரியமான செயல் அல்ல, எனினும், தன்னுடைய காதலிக்காக இவ்வாறு செய்தமைக்காக தான் சந்தோஷமடைகின்றேன் என்றார். எவ்வாறாயினும் அந்த இளைஞனுக்கு பெருந்தொகையில் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் செயற்பாடு தொடர்பில் கேள்வியுற்ற வர்த்தகர் ஒருவர், இளைஞன் மீது அனுதாபப்பட்டு அந்த தண்டப்பணத்தை செலுத்தியுள்ளார் என்று செய்தி தெரிவிக்கின்றது.



