Breaking News

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது - முன்னாள் நகர முதல்வர் அஸ்பர் குற்றச்சாட்டு

நமது நிருபர்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தன் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் அஸ்பர் குற்றச்சாட்டொன்றினை முன்வைத்துள்ளார். 

காத்தன்குடி கயா பேக்ஹவுஸில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக் குற்றச்சாட்டை முன்வைத்தார்;. தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த ஐந்தாம் மாதம் 15ஆந் திகதி இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நாம் எமது பதவிகளிலிருந்து விலகினோம். 

காத்தான்குடியில் திண்மக் கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற செய்தியினை மக்கள் அனைவருக்கும் கொண்டு சென்ற பெருமை ஊடகவியலாளர்களான உங்கள் அனைவரையுமே சாரும். 

எமது பிரதேச குப்பைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஆற்றங்கரையிலேயே கொட்டப்பட்டு வந்தன. 30 ஆண்டுகால யுத்தம் காரணமாக யுத்தம் நடைபெற்ற பிதேசங்களிலும் மற்றும் ஏனைய பிதேசங்களிலும் திண்மக் கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. 3 அல்லது 4 உள்ளூராட்சி மன்றங்களே அதற்கு நிரந்தரத் தீர்வினை கண்டிருந்தன. 

கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நகரசபையின் அதிகாரத்தினைப் பொறுப்பேற்றது தொடக்கம் திண்மக் கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தோம் 

கழிவுகளை தரம் பிரிக்கும் முறையினை அறிமுகப்படுத்தி அதனை பசளையாக வெளியாக்க வேண்டுமெனவும் மீதியானவற்றை மீழ்சுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அதில் மீதமாக வருபவற்றை தொழில்நுட்ப ரீதியான ஓர் இடத்தில் போட வேண்டும் என தீர்மானித்து அதற்காக காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் காணியொன்றை கொள்வனவு செய்தோம். நகர சபையில் பணம் இல்லாததன் காரணமாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாஇ பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் வேறு நிறுவனங்களினதும் அனுசரணையுடன் பொதுமக்களின் நிதிப் பங்களிப்புடன் 110 பேர்ச் காணி கொள்வனவு செய்யப்பட்டது. மேலும் ஐந்து ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டு 87 இலட்ச ரூபா செலவில் இயற்கைப் பசளை தயாரிக்கும் நிலையம் ஒன்றை அமைத்தோம். 

அம்பாறை மாவட்டத்தில் வெற்றிகரமாக இயங்கிவந்த புனொப்ஸ் என்ற நிறுவனம் மட்டக்களப்புக்கு வருவதற்கு காரணம் நாங்களே. திண்மக் கழிவகற்றலுக்கு அந்த நிறுவனம் எமக்கு பெரிதும் உதவியது.
நானே நேரடியாக 10இ000 வீடுகளுக்கு நேரடியாகச் சென்று குப்பைகளைத் தரம் பிரித்துத் தருமாறு கேட்டேன். ஏனைய வீடுகளுக்கு எமது நகர சபை ஊழியர்கள் சென்றனர். 75 வீதமான மக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி குப்பைகளைத் தற்போதும் தரம் பிரித்துத் தந்து கொண்டிருக்கின்றனர்.  

தயாரிக்கப்படடும் இயற்கைப் பசளை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தரமான பசளையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதனை நீங்கள் நேரடியாகச் சென்று பார்வையிடலாம். 
கடந்த 15 நாட்களாக காத்தான்குடி நகரசபையின் விசேட ஆணையாளர் திரு.சர்வேஸ்வரனின் அனுமதியின்றி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் நகர சபையின் ட்ரெக்டர் வண்டிளுக்குப் பின் தொடர்ந்து சென்று முன்னர் இருந்த முதல்வர் எதனையும் செய்யவில்லை என்றும் நாமே நிரந்தரத் தீர்வை காணப் போகிறோம் என கூறி அவர்களது அற்ப அரசியலுக்காக என் மீது சேறு பூச முனைகின்றனர். 

காணி கொள்வனவின் போது பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். சுற்றுச் சூழல் அதிகார சபைக்கு பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்தனர். தற்போது பசளை தயாரிப்பதற்கு எனக்கூறி தமது பெயர் பொறிக்கப்பட்ட பைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக வழங்குகின்றனர். காலப் போக்கில் இந்த பைகளே குப்பையாக மாறும். போலித்தீன் பானையைக் குறைத்து ஆரோககியமான சமூகமொன்றை உருவாக்கி காத்தான்குடியை பசுமை நகரமாக மாற்றுவதற்கே நாம் முயற்சி செய்தோம். 

குறிப்பிட்ட ஒரு காலத்திற்கே மக்கள் இதனைப் பினபற்றுவார்கள். அத்துடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினாலும் குறிப்பிட்ட காலத்திற்கே இதனை வழங்க முடியும். இந்த வழங்குகை நிறுத்தப்பட்ட பின்னர் நகர சபையே இதனைக் கொள்வனவு வழங்க வேண்டி ஏற்படும். என் மீதும் முன்னாள் பிரதியமைச்சர் மீதும் சேறு பூசுவதற்காகவும் பெய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்