Breaking News

ஷிகர் தவண், தோனி அரை சதம்: கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி..!

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் ஷிகர் தவண், தோனி ஆகியோர் அரை சதம் விளாச, 77 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா - வங்கதேசம் இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம் வங்கதேசத்தின் மிர்பூரில் புதன்கிழமை பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. வங்கதேசம் ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில் எவ்வித நெருக்கடியும் இன்றி ஆட்டத்தை எதிர்கொண்டது.
அதே வேளையில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் களம் கண்டது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மோர்டாஸா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்குப் பதிலாக உமேஷ் யாதவ், தவல் குல்கர்னி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது. வங்கதேச அணியில் தஸ்கின் அகமதுவுக்குப் பதிலாக அராஃபத் சன்னி களமிறங்கும் அணியில் இடம்பெற்றார்.
தவண் 74 ரன்கள்: ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் இந்திய அணியின் இன்னிங்ûஸ தொடங்கினர். இந்த ஜோடி நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. அணியின் ஸ்கோர் 35 ரன்களை எட்டியிருந்தபோது ரோஹித் சர்மா (29 ரன்கள்) லிட்டன்தாஸிடம் கேட்ச் ஆனார். இந்த தொடரில் வங்கதேசத்தின் இளம் வீரர் முஸ்டாபிஸýர் ரஹ்மானின் பந்துவீச்சில் ரோஹித் சர்மா மூன்றாவது முறையாக ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி (25 ரன்கள்) இந்த முறையும் பெரிய அளவில் ரன் குவிக்க தவறிவிட்டார்.
19.5-ஆவது ஓவரில் ஷாகிப் அல் ஹசன் வீசிய பந்தை கோலி விளாச முயன்றபோது, அது நூலிழையில் தவறி ஸ்ட்ம்ப்பை பதம் பார்த்தது.
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் தோனி, அரை சதம் விளாசியிருந்த தவணுடன் கைகோத்தார். இருவரும் விக்கெட் சரிவை தடுத்தனர். அவ்வப்போது அடித்து ஆடிய தவண் சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. அணியின் ஸ்கோர் 158 ரன்களை எட்டியிருந்த போது தவண் அடித்த பந்தை "ஷார்ட் மிட்-விக்கெட்' திசையில் நின்றிருந்த நசீர் ஹுசைன் தாவிப் பிடித்தார்.
விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி: இதனால் ஷிகர் தவண் 75 ரன்களுடன் (73 பந்து, 10 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அம்பாதி ராயுடு, தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளை பவுண்டரியாக மாற்றியதோடு, ஒன்று, இரண்டு என ஓடி ஓடியும் ரன் சேர்த்தனர்.
குறிப்பாக தோனியின் "ஃபார்ம்' சரியில்லை என்று எழுந்துள்ள விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் களத்தில் நிலைத்து ஆடி அரை சதம் விளாசினார். தோனி - ராயுடு ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு கூட்டாக 93 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது.
44-ஆவது ஓவரில் ராயுடு (44 ரன்கள், 49 பந்து) தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பிறகு சிறிது நேரத்திலேயே தோனியும் ஆட்டமிழந்தார். முஸ்டாபிஸýர் வீசிய 46-ஆவது ஓவரில் தோனி அடித்த பந்தை, "டீப் மிட்-விக்கெட்' திசையில் இருந்த மோர்டாஸா கேட்ச் செய்தார். இதனால் தோனி 69 ரன்களுடன் (77 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) வெளியேறினார்.
கடைசி நேரத்தில் சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடினார். இதனால் அணியின் ஸ்கோர் 300 ரன்களை எட்டியது. 21 பந்துகளை சந்தித்த ரெய்னா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்திருந்தபோது முஸ்டாபிஸýரின் பந்துவீச்சில் போல்டானார்.
இந்தியா 317 ரன்கள்: தொடர்ந்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. ஸ்டூவர்ட் பின்னி 17 ரன்களுடனும், அக்ஷர் படேல் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்டதால், முதல் 2 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முஸ்டாபிஸýருக்கு 5 விக்கெட் கனவு இந்த முறை கலைந்தது. 
இருப்பினும் அவர் இந்த ஆட்டத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து, தனது விக்கெட் எண்ணிக்கையை 14-ஆக உயர்த்தினார். இதன் மூலம் முதல் மூன்று ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ரயான் ஹாரிஸின் சாதனையை அவர் சமன் செய்தார். முஸ்டாபிஸýர் தவிர வங்கதேச கேப்டன் மோர்டாஸா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்கதேசம் தோல்வி: இதன் பின்னர் 318 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேசம் ஆரம்பத்தில் சிறிது அதிரடி காட்டியது. இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் வங்கதேசம் தடுமாற்றத்தில் சிக்கியது.
தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் 40 ரன்களும், நடுவரிசையில் களமிறங்கிய சப்பீர் ரஹ்மான் 43 ரன்களும் சேர்த்ததே வங்கதேச அணி வீரர்களில் அதிகபட்சம் ஆகும். தொடர்ந்து விளையாடிய அந்த அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 3 விக்கெட்டுகளையும், குல்கர்னி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 
ஆட்டநாயகன் விருதை ரெய்னாவும், தொடர் நாயகன் விருதை முஸ்டாபிஸýரும் பெற்றனர். முடிவில் தொடரை வென்ற வங்கதேசத்துக்கு கோப்பை வழங்கப்பட்டது.