Breaking News

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்.


ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கண்டனம் தெரிவித்துள்ளார்.



இதனை பயங்கரவாதத்தின் கொடூரச் செயலாக வருணித்திருக்கும் அவர் ஜனநாயகத்திற்கு எதிரான பயங்கரவாதத்தையும் ஏனைய அச்சுறுத்தல்களையும் முறியடிப்பதற்கு ஒன்றுபடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். 



ஜனாதிபதியின் கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புபின் அங்கத்துவ ஜனநாயக நாடாகிய ஆப்கானிஸ்தானின் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தின் கொடூரச் செயலை கண்டிக்கின்றேன். அந்த நாட்டின் ஜனநாயகத்தை நலிவுறச் செய்வதற்கான இவ்வாறான முயற்சிகள் மூலம் இவ்வகையான செயற்பாடுகளுக்கெதிரான ஆப்கானிஸ்தானின் போராட்டத்தில் பின்னடையினை ஏற்படுத்திவிட முடியாது. 



சுமார் மூன்று தசாப்தங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி அதனை வெற்றிகொண்ட நாடு என்ற வகையில் பாதிக்கப்பட்டோரின் கவலையில் பங்குகொள்வதோடு காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறது.   



நாம் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டொருமைப்பாட்டுடன் இணைந்திருப்பதோடு ஜனநாயகத்திற்கு எதிரான பயங்கரவாதத்தையும் ஏனைய அச்சுறுத்தல்களையும் முறியடிப்பதற்கு ஒன்றுபடவேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்.
நமது நிருபர்