Breaking News

அனுமதி இல்லாமல் செல்போனில் படமெடுப்பது அத்துமீறல் : கமல்

கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘’பாபநாசம் ‘’. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘’த்ரிஷியம்’’ படத்தின் ரீமேக் இது. வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர் சார்பில் சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது: ஒரு கதையை மூன்று மொழிகளில் ஒத்திகைப் பார்த்து வெற்றி என்ற நிலையில், எங்கள் கையில் தந்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். 

இதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அது பெருமையாக இருக்கிறது. நான் மட்டும் நன்றாக நடித்தால் போதாது. அனைவரும் நடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். அந்த முக்கியம் இதில் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் கவுதமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். ஒரு நல்ல நடிகையை நடிக்கவிடாமல் வீட்டில் பூட்டி வைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. இதை எனது சொந்த விருப்பம் காரணமாக சொல்லவில்லை. நிஜமாகவே சொல்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். அவரது நண்பரும் எழுத்தாளருமான சுகா நெல்லை வழக்கு பேசப் பயிற்சிக் கொடுத்தார். இந்தப் படத்துக்கு நெல்லை வழக்கு முக்கியமானது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். 

பின்னர் அவரிடம், ‘’செல்போன் கேமரா வந்த பிறகு பாதுகாப்பில்லை என்கிற நிலை வந்திருக்கிறது. ‘’பாபநாசம்’’ படத்தின் கரு கூட இது தொடர்பானதுதான். உங்கள் கருத்து என்ன?’’ என்று நிருபர்கள் கேட்டனர்.  அப்போது அவர் கூறியதாவது: இது கார் வாங்கினா பெண்களைக் கடத்திட்டுப் போயிருவாங்கன்னு சொல்றது மாதிரி இருக்குது. நவீன கருவிகளை எப்படி நல்லதுக்குப் பயன்படுத்தறாங்க அப்படிங்கறதுதான் முக்கியம். ‘’ஐயா, உங்க பையன் பாசாயிட்டான்’’னு சொல்றதுக்கும் பயன்படுத்தலாம். மிரட்டிப் பணம் பறிக்கதுக்கும் பயன்படுத்தலாம். எனக்கு என்ன இதுல பிடிக்காத விஷயம்னா, ஒருவேளை நான் நடிகன் அப்படிங்கறதால கூட இருக்கலாம். 

அதாவது செல்போன் மூலம் எல்லாரையும் படம் பிடிக்கலாம்னு நினைக்கிறாங்க. அதுக்கு அனுமதி இருக்கிறதா நினைக்கிறாங்க. அது நியூசென்ஸா இருக்கு. இதுக்குக் காரணம் செல்போன் விளம்பரங்களே அப்படித்தான் இருக்கு. என் தனிமையை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பது அத்துமீறலாக இருக்கு. கையில போனை வச்சுட்டு படம் எடுத்துக்கிட்டப் பிறகு எடுத்துக்கலாமான்னு கேட்கிறாங்க.  இதைத் தவிர அது மேல எனக்கு கோபம் இல்லை.