Breaking News

பாகிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: 3 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரிக்டர் அளவு 5.1ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத்தின் வடகிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு சுமார் 26 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது இஸ்லாமாபாத்தின் சில பகுதிகள் குலுங்கியதாக கூறப்படுகிறது. வீடுகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அதிர்வுக்குள்ளாகின. அந்த நேரத்தில் மக்கள் அனைவரும் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என தெரியவருகிறது. கிழக்கு பஞ்சாப் மாகாணம், வடமேற்கில் உள்ள கைபர் பகதுங்வா, குலாம் ரசூல் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல பகுதிகளில் இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. பிற்பகல் வெளியான தகவலின் படி அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த அபோட்டாபாட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அங்கிருந்த ஒரு மண்வீடு இடிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஒன்பது வயது சிறுவன் மற்றும் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 48 வயது மதிக்கத்தக்க குடும்பத்தலைவியும் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 73 ஆயிரம் பேர் பலியாகினர். சுமார் 35 லட்சம் மக்கள் வீடு, வாசலை இழந்து தவித்தனர். இதேபோல், கடந்த 2013ம் ஆண்டு நிலநடுக்கத்துக்கு சுமார் 370 பேர் பலியாகினர்.