Breaking News

பிளாக் பெர்ரி செல்போனில் பேச ஒபாமாவுக்கு தடை

உலகம் பயணிக்கும் வேகத்துக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுடன் தற்போது பலவிதமான செல்போன்கள் உலா வருகின்றன. ஆனால் 2010 ம் ஆண்டிற்கு முன்பு ‘பிளாக்பெர்ரி’ செல் போன்கள் ஆதிக்கம் செலுத்தின.

அவை முக்கிய பிரமுகர்கள், வசதிபடைத்த செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்தன. ஏனெனில் அக்காலத்தில் தொழில் நுட்பத்துடன் அதிக விலைக்கு இவை விற்கப்பட்டன.

இந்த ‘பிளாக் பெர்ரி’ செல்போனை தான் 2008–ம் ஆண்டில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தி வருகிறார். இவர் அதிபர் பதவி ஏற்பதற்கு முன்பே இது அவரிடம் உள்ளது.

ஒபாமா அதிபர் பதவி ஏற்ற பிறகு பிளாக்பெர்ரி போன்று ஆண்ட்ராய்டு, மற்றும் ‘ஐ.ஓ.எஸ்’ தொழில் நுட்பம் வாய்ந்த செல்போன்கள் புழக்கத்தில் வந்து விட்டன. எனவே, அமெரிக்க அரசு அதிகாரிகள் அவை பாதுகாப்பு மிக்கதாக கருதி அவற்றை பயன்படுத்த தொடங்கினர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனுக்கு மாறிவிட்டனர். ஆனால் ஒபாமாவின் ‘பிளாக் பெர்ரி’ செல்போனில் பாதுகாப்பு காரணங்கள் கருதி ‘செக்யூர் வாய்ஸ்’ என்ற புதிய மென்பொருள் புகுத்தப்பட்டுள்ளது.

அதில் இருந்து அவர் பேச முடியாது குறுந்தகவல்கள் அனுப்ப முடியாது. பாடல், இசையை கேட்க முடியாது, செல்பியோ, போட்டோ வோ எடுக்க முடியாது. அந்த செல்போன் மூலம் அவரது மனைவி மிச்செலி ஒபாமா, துணை அதிபர் ஜோபிடன் மற்றும் ஒபாமாவின் தலைமை அதிகாரி, செய்திதுறை செயலாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என 10 பேரிடம் மட்டுமே பேச முடியும்.

அதற்கான ஏற்பாடுகளை தேசிய பாதுகாப்பு நிறுவனம் செய்துள்ளது. இந்த செல்போனுக்கு பதிலாக ஒபாமா பேசுவதற்கு புதிய செல்போன் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இந்த தகவலை ஒரு டி.வி யில் ஒளிபரப்பான ‘டு நைட் ஷோ’ நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா தெரிவித்தார். தனது பிளாக்பெர்ரி செல்போனை ஒரு விளையாட்டு பொருள் போன்று பாவித்து வருவதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.