நைஜீரியாவில் வெடி குண்டு தாக்குதல்; 20 பேர் பலி
நைஜீரியாவின் வடக்கு நகரான ஸாரியா நகரில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக கதுனா மாகாண கவர்னர் நசீரி அகமது எல் ருபாய் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் கடந்த காலங்களில் இதேபோன்ற பல தாக்குதல்களை நடத்திய போகா ஹரம் தீவிரவாதிகள்தான் இச்செயலை செய்திருக்கலாம் என்று சந்தேககிப்படுகின்றனர். கதுனா மாகாண கவர்னர் எல் ரூஃபாய் மேலும் கூறுகையில், மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும் இன்னும் சில வாரங்களுக்கு கூட்டம் மிகுந்த இடங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இது போன்ற தாக்குதலை வரும் காலங்களில் தவிர்க்க மத்திய பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து கதுனா மாகாண அரசு பயனுள்ள வகையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.



