Breaking News

சீனா ஷூ தொழிற்சாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி

சீனாவில் ஷூ தொழிற்சாலையில் நேற்று மதியம்(04.07.2015) கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகி உள்ளனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள செஜ்ஜியாங் பகுதியில் உள்ள வென்லிங் என்ற இடத்தில் ஷூ தொழிற்சாலை உள்ளது. இதில் ஷூ தயாரிப்பில் 51 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் சரமாரியாக திபு திபுவென சரிந்து விழுந்தது. இதில்  51 ஊழியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த 42 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் 9 பேரை சடலமாக மீட்டெடுத்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் படுகாயம் அடைந்தவர்களின் நிலைமை குறித்த தகவலை டொக்டர்கள் வெளியிட மறுத்துவிட்டனர்.

சீனாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து நடந்து 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது. மேலும் கடந்த மே மாதத்தில் அங்கு வைத்தியசாலை ஒன்றில் நடந்த தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாநாட்டில் கட்டிடம் இடிந்து விழுவதும், தொழிற்சாலையில் விபத்து ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகின்றது.