Breaking News

மெஸ்சி–மாரடோனா ஒப்பிடலாமா?

சிலி அணிக்கு எதிரான கோபா அமெரிக்க கால்பந்து பைனலில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான மெஸ்சியின் ஆட்டம் எடுபடவில்லை. பார்சிலோனா கிளப் அணிக்காக அசத்தும் இவர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் பெரிய அளவில் சோபிப்பதில்லை. சர்வதேச போட்டிகளில் 1020 நிமிடங்களுக்கு மேலாக ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
கடந்த 1986ல் நடந்த உலக கோப்பை தொடரில் தனிநபராக அசத்திய ஜாம்பவான் மாரடோனா, அர்ஜென்டினாவுக்கு சாம்பியன் பட்டம் பெற்று தந்தார். இவரோடு ஒப்பிட்டு பேசப்படும் மெஸ்சி, கடந்த உலக கோப்பை பைனலில் ஜெர்மனியிடம் தோற்று வாய்ப்பை வீணாக்கினார். தற்போது கோபா தொடரிலும் கோப்பை கைப்பற்ற தவறினார். இவ்விரு தொடரிலும் அணியை பைனல் வரை அழைத்து வந்தார். 
புள்ளிவிவரங்களின்படி மாரடோனாவை மெஸ்சி முந்துகிறார். இவர் 103 சர்வதேச போட்டிகளில் 46 கோல் அடித்துள்ளார். மாரடோனா 34 போட்டிகளில் 91 கோல் தான் அடித்துள்ளார்.
கிளப் அளவில் மெஸ்சி 412 கோல்(482 போட்டி) மற்றும் மாரடோனா 312 கோல்(588 போட்டி) அடித்துள்ளனர். மெஸ்சி 4 முறை ‘பிபா’ சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இந்த பெருமை மாரடோனாவுக்கு ஒரு முறை மட்டுமே கிடைத்தது. மெஸ்சியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில்  சிறப்பாக செயல்படுகிறார். ஹிகுவேன் போன்ற சக வீரர்கள் இவருக்கு கைகொடுக்க தவறுகின்றனர். நல்ல அணி அமையும் பட்சத்தில் பெரிய தொடர்களில் மெஸ்சி நிச்சயம் கோப்பை வெல்வார். பீலே, மாரடோனா போன்ற வீரர்களின் வரிசையில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என அர்ஜென்டினா ரசிகர்கள் நம்புகின்றனர்.-----
ரசிகர்கள் தாக்குதல்
வெற்றி ஆர்ப்பரிப்பில் சிலி ரசிகர்கள் சிலர் அரங்கில் இருந்த அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சியின் சகோதரர் ரோட்ரிகோ மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தலையிட்டு  மெஸ்சியின் குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.