நோட்டமிடும் சி.சி.டி.வி. கேமராக்கள்
நோட்டமிடும் சி.சி.டி.வி. கேமராக்கள்
உலகின் முதல் சி.சி.டி.வி.யை தயாரித்தது ஜெர்மனியின் 'சிமென்ஸ்-ஏ.ஜி' (SiemensAG) நிறுவனம். அதனை வடிவமைத்தவர் ஜெர்மன் பொறியாளர் வால்ட்டர் புரூச் (Walter Bruch). இவர்தான் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர். 1936-ம் ஆண்டு பெர்லினில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டியை, தொலைக் காட்சியில் ஒளிபரப்பி உலகப்புகழ் பெற்றவரும் இவர்தான்.
சாலை போக்குவரத்தினை கண்காணிக்க பிரிட்டனில்தான் முதன் முதலில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. சாலை எங்கும் சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவி, போக்குவரத்தை கண்காணித்ததோடு, விபத்துக்களை தடுக்கவும் பயன்படுத்தினார்கள். பின்பு பஸ், ரெயில், டாக்சி போன்றவைகளிலும் இந்த வகை கேமராக்கள் நிறுவப்பட்டன.
1968-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் வணிக நிறுவனங்களில் சி.சி.டி.வி. வீடியோ கேமராக்களை நிறுவினார்கள். நியூயார்க் நகரில் பொருத்தப்பட்ட இந்த கேமராக்களால், அங்குள்ள வணிக நிறுவனங்களில் குற்றங்கள் குறைந்தன. அதன் பின்பு உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் குற்றங்களை தடுக்கவும், மனிதர்களின் பிரச்சினைக்குரிய செயல்பாடுகளை கண்காணிக்கவும் இந்த வகை கேமராக்களை பயன்படுத்தினர். போலீஸ் துறைக்கு இந்த வகை கேமராக்கள் ரொம்பவே உபயோகமாக இருக்கின்றன. பெருமளவு போலீசை நிறுத்தி குற்றங்களை கண்காணிப்பதைவிட, சில கேமராக்களை பொருத்துவது செலவு குறைவான நடவடிக்கையாக அமைகிறது.
1969-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த 'மேரி வன் பிரிட்டன் பிரவுன்' என்ற பெண்மணி, வீட்டில் பொருத்தக்கூடிய பாதுகாப்பு சாதனத்தை (Home Security System) கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றார். இந்த சிஸ்டத்தில் ஒரு கேமராவும் நான்கு துவாரங்களும் இருக்கும். அது மேலும் கீழும் அசைந்து ஒன்றை ஒன்று பார்க்கும். அந்த கேமராவில் பதிவாகும் பிம்பங்கள் வீட்டின் உள்ளே இருக்கும் திரையில் (Monitor) தெரியும். இந்த கேமராவை வீட்டின் வெளியே பொருத்தினால், வெளியே உள்ள நபர்களின் நடவடிக் கைகளை கண்காணிப்பதோடு அவர்களின் குரலையும் கேட்கமுடியும். அத்துடன் ரிமோட் கருவி மூலம் வீட்டின் கதவை தாழிடவும் செய்யலாம்.
* ஜெர்மனியை சேர்ந்த பொறியாளர் வால்ட்டர் புரூச் தான் கண்டுபிடித்த சி.சி.டி.வி. கேமராவுடன்
* மேரி வன் பிரிட்டன் பிரவுன் . அமெரிக்காவை சேர்ந்த இவர் ‘ஹோம் செக்யூரிட்டி சிஸ்டத்தை’ கண்டுபிடித்தவர்
உலகம் முழுக்க சி.சி.டி.வி.க்களின் பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து, 2009-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும், வடகிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து 'பொது இடங்களில் சி.சி.டி.வி.க் களின் பயன்பாடும்- குற்றத்தடுப்பும்' என்ற ஆய்வை மேற்கொண்டது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை அடிப்படையாகக்கொண்டு 44 ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. அவை மூலம் கீழ்கண்ட உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.
* பார்க்கிங் பகுதிகளில் இந்த வகை கேமராக்கள் நன்றாக பயன்படுகின்றன. அதன் மூலம் 51 சதவீத குற்றங்கள் குறைந்திருக்கின்றன.
* போக்குவரத்து துறையில் இந்த கேமராக்களின் பயன்பாட்டால் 23 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளன.
* இதர பகுதிகளில் இந்த கேமராக்களின் பயன் பெருமளவு இல்லை. பொது இடங்களில் 7 சதவீத அளவுக்கே குற்றங்கள் குறைந்திருக்கின்றன.
மேற்கண்டவாறு அந்த ஆய்வறிக்கைகள் குறிப்பிட்டன.
தீவிரவாத தடுப்பு அதிகாரிகளுக்கு இந்த கேமராக்கள் நன்கு பயன்பட்டன. 1970-ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் ஏராளமான சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவி, தீவிரவாத தடுப்பு கண்காணிப்பை எளிதாக்கினார்கள். மேலும் பொதுத்துறை வாகனங்களிலும், காவல்துறை வாகனங்களிலும் சி.சி.டி.வி.க்களை பொருத்தி 'ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட் ரெக்கனைஷேசன்' மூலம் லண்டனில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களை கண்காணித்து சீர் செய்தார்கள். மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை,
சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் தூரத்தில் இருந்து கண்காணித்தார்கள். அணு உலை மற்றும் ரசாயன உலைகளை கண்காணிக்கவும், விசேஷ கேமராக்களை வடிவமைத்து பயன்படுத்தினார்கள்.
இந்த வகை கேமராக்களின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்ததை தொடர்ந்து, குற்றவாளிகள் இதனை தங்கள் எதிரியாக பாவிக்கத் தொடங்கினார்கள். அதனால் அந்த கேமராக்களை அடையாளங்கண்டு தாக்கி சேதப்படுத்தினார்கள். உலகம் முழுக்க இன்றும் அவைகளை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் எப்படி இயங்குகின்றன தெரியுமா?
இவை குறிப்பிட்ட தனது எல்லைக்குள் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கண்காணித்து பிம்பங்களை பதிவு செய்கின்றன. இந்த வகை கேமராக்கள் சமிக்ஞை (Signal) களை பெற்று, கணினிகளில் பதிவு செய்யும் முறைக்கு 'அனலாக்' (Analogue) என்று பெயர்.
இந்த முறையில் சமிக்ஞைகளை நேரடியாக வீடியோ டேப் ரிக்கார்டரில் படமாக பதிவு செய்ய இயலும். அனலாக் சமிக்ஞைகள், நாடாவில் (tape) பதிவாகும்போது, நாடா தொடர்ச்சியாக மெதுவான வேகத்தில் சுழலும். நொடிக்கு 4 'பிரேம்' வீதம் பதிவாகும். கேமராவில் பதிவாகும் காட்சிகளில் நொடிக்கு நொடி மாற்றங்கள் நிகழலாம். அதனால் அவை துல்லியமாக கண்காணித்து பதிவு செய்கின்றன.
அனலாக் சமிக்ஞைகளை டிஜிட்டல் சமிக்ஞைகளாக மாற்றி கணினியில் சேகரிக்கலாம். அதற்கு அனலாக் வீடியோ கேமராவை நேரடியாக கணினியில் உள்ள 'வீடியோ கேப்ச்சர் கார்டில்' இணைக்க வேண்டும். அந்த 'கார்டு' அனலாக் சிக்னல்களை டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றிக்கொள்ளும். அந்த கார்டுகள் மலிவாக கிடைக்கக் கூடியவை. ஆனால் தொடர்ச்சியாக டிஜிட்டல் சிக்னல்கள் பதிவாகுவதால் அதன் அளவு 5:1 என்ற அளவில் சுருக்கப்படும். இதற்கு மாற்றாக'டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர்' (DVR) மூலமும் சேகரிக்கலாம்.
கணினியில் சேகரிப்பதை விட டி.வி.ஆர் மூலம் சேகரிப்பதற்கு பராமரிப்பு செலவு குறைவு. சேகரிக்கும் முறையும் எளிது. டி.வி.ஆர்.கள் வீடியோ சிக்னல்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புவதால் இது ஒரு நெட் வேர்க் கேமரா போலவும் இயங்கும்.
இந்த நவீன யுகத்தில் நாட்டில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், உயர்வகை மரங்களை கடத்துதல், பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீவிரவாதம், எல்லையில் ஊடுருவல் போன்ற செயல்கள் மிகப்பெரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் விளங்கி வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரை அரங்கங்கள், நட்சத்திர விடுதிகள், வங்கிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஏ.டி.எம். மையங்கள், பேருந்து ரெயில் மற்றும் விமான நிலையங்களிலும் குற்ற செயல்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. இது காவல் துறைக்குப் பெரும் சவாலாக உள்ளது. அந்த சவாலை முறியடிக்க சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுகின்றன.
சாலை விபத்துக்களை கண்டறிதல், சாலை மூலமாக குற்றவாளிகள் தப்பிச் செல்லும் வாகனங்களை துரத்திப் பிடித்தல் போன்ற பணிகளுக்கும் பல வழக்குகளில் காவல் துறைக்கு இந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியாக இருந்திருக்கின்றன. உலக அளவில் சி.சி.டி.வி.க்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.





