Breaking News

பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்: கலப்பு இரட்டையரில் கலக்கல்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் பெயா, ஹங்கேரியின் டிமியா பபோஸ் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 6–1 என மிகச் சுலபமாக கைப்பற்றிய பயஸ் ஜோடி, 2வது செட்டை 6–1 என தன்வசப்படுத்தியது. அபாரமாக ஆடிய பயஸ், ஹிங்கிஸ் ஜோடி, 40 நிமிடம் வரை நடந்த பைனலின் முடிவில் 6–1, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நான்காவது முறை: இதன்மூலம் விம்பிள்டன் கலப்பு இரட்டையரில் பயஸ் 4வது பட்டத்தை கைப்பற்றினார். முன்னதாக இவர், 1999ல் லிசா ரேமண்டு (அமெரிக்கா), 2003ல் மார்டினா நவரத்திலோவா (அமெரிக்கா), 2010ல் காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஆகியோருடன் இணைந்து பட்டம் வென்றார்.
எட்டாவது பட்டம்: ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையரில் பயஸ் வென்ற 8வது பட்டம். இதற்கு முன் ஆஸ்திரேலிய ஓபன் (2003, 2010, 2015), யு.எஸ்., ஓபன் (2008) கலப்பு இரட்டையரில் கோப்பை வென்றுள்ளார். ஆனால் பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையரில் ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை. கடந்த 2005ல் பைனல் வரை முன்னேறினார்.