Breaking News

தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள பொதுத் தேர்தலில் புதிய வியூகம் - முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய வியூகமொன்று வகுக்கப்பட்டிருப்பதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வேட்மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் நாம் இந்தத் தேர்தலில் ஒற்றுமைப்பட்டாக வேண்டும். நமது அதிகாரத்தை மீள கைப்பற்றியாக வேண்டும். அதிகாரம் என்பது ஒரு சமூகத்தின் முக்கியமான அம்சமாகும். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சோதனைகளை அனுபவித்து வருகின்றது. நாம் இங்கு நிம்மதியாக நோன்பு திறப்பதற்கு இருக்கின்றபோது சிரியாவிலே குண்டுத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான எமது உடன்பிறப்புக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றர்கள். எமனிலே குண்டுத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான எமது சகோதரர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றர்கள். பர்மாவிலே ஆயிரக்கணக்கான எமது சகோதரர்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி நடுக்கடலிலே தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பயங்கரமான பரிதாபகரமான சூழ்நிலையில்தான் எமது சமூகம் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.  

நமது நாட்டிலே கூட பல்வேறுபட்ட பௌத்த தீவிரவாத சக்திகள முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீது கைவைத்து முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறுபட்ட கோசங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்ற போராட்டங்களை ஆரமபித்துக்கொண்டிருக்கின்ற சூழலிலேதான் நாம் இந்த தேர்தல் களத்தில் நிற்கின்றோம். இந்த நிலையில் முஸ்விம்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு பிரதிநிதியும் முஸ்லிம்களை பாதுகாக்கின்ற ஒரு போராளியாக இருக்க வேண்டும். முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்தவம் என்பது வெறுமனே பஞ்சணை மெத்தைகளில் படுத்துறங்குகின்ற பிரதிநிதித்துவமல்ல, மாறாக இரவுபகலாக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் போராட வேண்டிய ஒரு பிரதிநிதித்துவம். அவ்வாறான பிரதிநிதித்தவத்தை தெரிவு செய்கின்ற ஒரு சமூகமாக நாம் மாற வேண்டும். வெறுமனே கோஷங்களை எழுப்பி, ஏமாற்றி, பொய்களைக் கூறி முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய எத்தனிக்கின்ற எந்த சக்திக்கும் நாம் இடமளிக்கக் கூடாது. 

ஒரு சமூகம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் இருக்கின்ற  சக்தி பாராளுமன்ற பிரதிநித்துவமாகும். அதனை இல்லாமலாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசு புதிய சட்டமூலமொன்றைக் கொண்டு வந்து முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு திட்டமிட்டபோது அதனை தோற்கடித்து, இரவு பகலாகச் செயற்பட்டு பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலொன்றிற்கு இன்று முகம் கொடுத்துள்ளோhம். இந்த சூழ்நிலையில் எமது பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்கக் கூடிய, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய பௌத்த தீவிரவாதத்தை முகம் கொடுக்கக் கூடிய சக்தி மிக்க தலைமைத்துவங்கள் உருவாக்கப்படல் வேண்டும். நாம் உருவாகி அவற்றிற்கு முகம்கொடுக்கின்ற போதுதான் எதிர்காலத்தில் இந்த சமூகம் தலைநிமிர்ந்து வாழமுடியும். இன்று அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் மிகத் தொளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றார். 

ஊழலையும் இலஞ்சத்தையம் ஓழித்து நல்லாட்சியை உருவாக்குவதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 62 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அதனை நாம் மரியாiயோடு ஏற்றுக்கொள்கின்றோம். அந்த உறுதிமொழியோடு இணைந்து நாம் செயற்படவிருக்கின்றோம். மிகவும் நேர்மையான ஒரு நிருவாகத்தை இந்த நாட்டிலே எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து கொண்டு செல்வதற்கான உடன்பாட்டை நாம் செய்திருக்கின்றோம். அதற்கான அத்திவாரத்தினை நாம் இட வேண்டும். இன, மத, மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றிணைய வேண்டும். 

கடந்த காலங்களில் நீங்கள் எமக்களித்த பொறுப்புக்களை மிகச் சரியாக நிறைவேற்றியுள்ளோம். அரசாங்கத்தின் மூலமும் அதற்கப்பால் வெளிநாட்டு நிதிகள் மூலமும் எமது பணிகளை செய்துள்ளோம். மக்களின் தேவைகள் அடையாளம் காணப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளன. எமது பயணம் விடுபட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும். எமது மார்க்க விடயங்களில் தலையிடுவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது. மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற அனைத்தையும்  அனுபவிக்கின்ற உரிமை இந்த சமுதாயத்திற்கு உண்டு. இது தொடர்பான தெளிவான உடன்படிக்கைகளோடுதான் நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். 

இந்தத் தேர்தலில் நீங்கள் தெரிவு செய்யப்போகும் தலைமைத்துவம் உங்களுக்கோ அல்லது மாவட்டத்திற்கோ மாதத்திரமல்லாது முழு இலங்கையிலுமுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு சேவையாற்றக் கூடிய, அரசியல் உரிமைகளுக்காகப் போராடுகின்ற தலைமைத்துவமாக இருக்கும். நாம் ஒருபோதும் இலஞம், ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டது கிடையாது. எமக்கெதிராக முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என குறிப்பிட்டு குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளன.   

மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைமைத்துவம் அதிக விருப்பு வாக்குகளை பெறுபவருக்கே வழங்கப்படும். எமக்கு அந்தத் தலைமைத்துவம் கிடைத்ததற்குக் காரணம் நீங்கள் அளித்த வாக்குகளாகும். இது எமக்கு மீண்டும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக சில கட்சிகள் திட்டமிட்டு செயற்படுகின்றன. 

எமக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. எமது திட்டங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. நாம் எதிர்க்கட்சிக்கு வந்த பின்னர் எமது திட்டங்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 

நான தோற்கடிக்கப்படுவது என்பது நான் தோல்வி அடைகின்றேன் என்று அர்த்தமல்ல, அது நீங்கள் தோற்கடிக்கப்படுகின்றீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். 

இந்த சமூகம் அறிவு ரீதியாக முன்னேற வேண்டுமென்பதற்காக 650 கோடி ரூபா செலவில் முஸ்லிம்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் சுபைர், முன்னாள் மட்டக்களப்பு மத்தி வலையக் கல்விப் பணிப்பாளர் ஜெயினுதீன், முன்னாள் காத்தான்குடி நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.அஸ்பர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜௌபர்கான் உட்பட பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக புத்திஜீவிகள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள், ஊர்ப் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பெர்துமக்கள் என ஏராளமானேர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.      
நமது நிருபர்