Breaking News

காத்தான்குடி பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – விழிப்புடன் செயற்படுமாறு பொலீஸார் வேண்டுகோள்

காத்தான்குடி பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் இது தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படவேண்டியது அவசியம் எனவும் காத்தான்குடி பொலீஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.பி.நிஷாந்த தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெறுகின்ற திருட்டுச் சம்பவங்கள் தொடாபில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் அண்மையில் மூன்று வீடுகளிலும், ஒரு கடையிலும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு வீட்டில் மாத்திரம் முப்பதரைப் பவுண் தங்க நகைகளும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தையாயிரம் ரொக்கப் பணமும் திருடப்பட்டுள்ளன. 

இது தவிர கல்லடி பிரதேசத்தில் தங்கச் சங்கிலி அபகரிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்வத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நோன்பு காலத்தில் முஸ்லீம்கள் இரவுத் தொழுகைக்காக பள்ளிவாயல்களுக்கு செல்லும்போது திருடர்கள் ஆட்கள் இல்லாத வீடுகளை நோக்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் தமது பணம் மற்றும் தங்க நகைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு அல்லது முடியுமானால் தங்களோடு எடுத்துச் செல்வதன் மூலம் தமது உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கள்கள் தொடர்பிலும் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் தொடர்பில் உடனடியாக பொலீஸ் அவசர அழைப்பு பிரிவு இலக்கமான 119 என்ற இலக்கத்திற்கோ அல்லது காத்தான்குடி பொலீஸ் நிலையத்திற்கோ தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

கையடக்கத் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பெயரைககூறி உங்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாக வரும் போலியான அழைப்புகளை நம்பி பலர் தமது பணத்தை வைப்புச் செய்து ஏமாந்துள்ளனர். இவ்வாறான அழைப்புகளை மேற்கொள்பவர்கள் பணம் கிடைத்தவுடன் தொடர்புகளை துண்டித்து விடுகின்றனர். அவர்கள் உபயோகிக்கும் சிம் அட்டைகள் மரணமடைந்த ஒருவருடையதாகவோ அல்லது எவரேனும் ஒருவரின் தொலைந்த சிம் அட்டையாகவோ இருப்பதனால் இதற்கு காரணமானவர்களை கண்டறிவதில் சிரமம் காணப்படுகின்றது. எனினும் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட கும்பலொன்றின் அங்கத்தவராக இருந்த பெண்ணொருவர் தற்போது கைது செய்யப்பட்டள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பொதுமக்களை விழிப்பூட்டுவதற்காக காத்தான்குடிப் பிரதேசத்தின் பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலீஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.பி.நிஷாந்த தெரிவித்தார்.
நமது நிருபர்