பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் விரைவில் திருமணம்...
அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது. எனவே அவருக்கு திருமணத்தை முடித்துவிட பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். மாப்பிள்ளை தேடும் படலமும் நடப்பதாக கூறப்படுகிறது. அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள ‘பாகுபலி’ படம் ரிலீசுக்கு தயாராகிறது. பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படம் வெளிவந்ததும் அனுஷ்கா திருமணம் நடக்கும் என்றும் மாப்பிள்ளையை முடிவு செய்து விட்டார்கள் என்றும் இணைய தளங்களில் செய்தி பரவி உள்ளது. இதற்கு அனுஷ்கா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் முடிந்துள்ளது. நான் நடித்த எல்லா படங்களுக்கு எனக்கு மனநிறைவை தந்துள்ளன. என் திருமணம் பற்றி வதந்தி பரவி உள்ளது. ஆனால் இந்த நேரம் வரைக்கும் திருமணம் பற்றி எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. ஆனாலும் எனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். விரைவில் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் பற்றி முடிவானதும் எல்லோருக்கும் தெரிவிப்பேன். பொருத்தமான மாப்பிள்ளையும் நல்ல நேரமும் அமைந்ததும் திருமணம் நடக்கும். அது காதல் திருமணமாகவோ அல்லது பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணமாகவோ இருக்கலாம். எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். இவ்வாறு அனுஷ்கா கூறினார். அனுஷ்கா ‘சிங்கம் 3’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஆர்யா ஜோடியாக ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது.