Breaking News

ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம்: லார்ட்ஸ் டெஸ்டில் அசத்தல்!


லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்த, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 566 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடக்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி 1–0 என, தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் பங்கேற்கும் இரண்டாவது டெஸ்ட் லார்ட்சில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 337 ரன்கள் எடுத்திருந்தது. ரோஜர்ஸ் (158), ஸ்மித் (129) அவுட்டாகாமல் இருந்தனர். ‘மிடில் ஆர்டர்’ சரிவு: நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 284 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஜர்ஸ் (173) அவுட்டானார். பின் வந்த கேப்டன் மைக்கேல் கிளார்க் (7) நீடிக்கவில்லை. வோஜஸ் (25), ஷான் மார்ஷ் (12) இருவரும் பிராட் வேகத்தில் வீழ்ந்தனர். இரட்டை சதம்: ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்டீவ் ஸ்மித். மொயீன் அலி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக இரட்டை சதம் கடந்தார். இவர் 215 ரன்னுக்கு, ஜோ ரூட் பந்தில் சிக்கினார். அறிமுக வீரர் பீட்டர் நெவில் (45) அரைசத வாய்ப்பை இழந்தார். மிட்சல் ஜான்சன் (15) ஏமாற்றினார். ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 566 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது. ஸ்டார்க் (12) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 4, ஜோ ரூட் 2 விக்கெட் வீழ்த்தினர். ‘டாப்–ஆர்டர்’ சொதப்பல்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ஆடம் லித் (0) மோசமான துவக்கம் தந்தார். ஜான்சன் ‘வேகத்தில் கேரி பேலன்ஸ் (23) போல்டானார். இயான் பெல் (1), ஜோ ரூட் (1) சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினர். இங்கிலாந்து அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த கேப்டன் அலெஸ்டர் குக், பென் ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. குக் (21), ஸ்டோக்ஸ் (38) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 2, ஸ்டார்க், ஹேசல்வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.