Breaking News

பல்லை கவனிக்காவிட்டால் பல்லிளித்து விடுவீர்கள்!

இரசாயன அமைப்பில், கல்சியம், பொஸ்பரஸ் கனிமம்களால் ஆனது பல். ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரியும் மேற்பகுதிக்கு, மகுடம் (கிரவுன்) என்று பெயர். முரசு(ஈறு)க்குள் புதைந்திருக்கும் பகுதிக்கு, வேர் (ரூட்) என்று பெயர்.

ஒவ்வொரு பல்லுக்குள்ளும் நடுவில், நரம்புகளும், ரத்தக் குழாய்களும் செல்கின்றன. இந்தப் பகுதிக்கு, பல் கூழ் (பல்ப்) என்று பெயர். அதைச் சுற்றி, 'டென்ட்டைன்' எனும் பகுதியும், அதற்கும் வெளியே வெள்ளை நிறத்தில் பல்லுக்கு ஓர் உறைபோல் அமைந்திருக்கும், 'எனாமல்' எனும் கடினமான பகுதியும் உள்ளன.

பல் சொத்தை:
பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை. குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என, எல்லோ ரையும் இது பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவது தான். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கெட்டுகள், மிட்டாய்கள், சொக்லேட்டுகள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரி உணவுப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள இனிப்பு  பொருள், பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, அமிலத்தை சுரக்கின்றன. இந்த அமிலம் எனாமலை அரித்து, பற்களை சிதைக்கின்றன; இதன் விளைவால், பற்கள் சொத்தையாகின்றன.

பற்களை சுத்தமாக பராமரிக்கத் தவறினாலும், பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். காபி, தேநீர் போன்றவற்றை அதிகமாகக் குடிப்பது, புகைபிடிப்பது, பான்மசாலா, வெற்றிலை பாக்குப் போடுவது போன்ற பழக்கங்களால், பற்களில் கறை, படியும்; அதில், பாக்டீரியாக்கள் சந்தோஷமாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழுந்து, பற்களின் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும்.

குழந்தைகள், இரவில் புட்டிப்பாலை குடித்தபடியே உறங்கிவிடுவர். அப்போது, பற்களின் மேல் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும்; சிலருக்கு, பரம்பரை காரணமாகவும் பல் சொத்தை வர வாய்ப்புண்டு.

பல் சொத்தைக்கு அறிகுறி என்ன?:சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். முக்கியமாக, இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும்; பின், பல்லில் வலி ஏற்படும்.
வாய் துர்நாற்றம், ஈறுகளில் சிவந்த நிறம் மற்றும் வலி இருத்தல், பாதிக்கப்பட்ட இடத்தில் வீக்கம், முகத்தில் வீக்கம், எதிர்பாராத பல் அரிப்புகள், துாக்கமின்மை, எதையும் விழுங்குவது கடினமாக இருத்தல், காய்ச்சல், உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும்; அப்போது, பற்களில் கறுப்பு குழி விழும்.

காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், கழுத்து வலி, காது வலி போன்றவையும் தொல்லை தரும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்துப் பழுதாகிவிடும். நாளடைவில், இந்த வேர்களைச் சுற்றி கட்டிகள் தோன்றிவிடும்.

சிகிச்சை என்ன?:பல ஆண்டுகளுக்கு முன் வரை பல் சொத்தையாகிவிட்டால், ஆரம்ப நிலையில் ஒருவித சிமென்டைக் கொண்டு சொத்தையை மூடுவர். ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் விட்டால், அந்த பல்லை நீக்கிவிடுவர். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்கு சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறிந்து, பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து, சிகிச்சை மாறுபடும்.

எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால், 'பில்லிங்' எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதும். சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், 'வேர் சிகிச்சை' என்று அழைக்கப்படும், 'ரூட் கெனால்' சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

செயற்கை பல்:
சிலர் சொத்தை விழுந்த பல்லை எடுத்து விடுகின்றனர். ஆனால், அந்த இடத்தில் செயற்கை பல்லை கட்டுவதில்லை; இது தவறு. இதனால், அருகில் உள்ள பற்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்தப் பற்கள், பக்கத்தில் சாய்ந்துவிடலாம்; இடைவெளி அதிகமாகிவிடலாம். அப்போது, நாக்கை அடிக்கடி கடித்துக் கொள்ள வேண்டி வரும்.

சொத்தையை தடுக்க வழி:
காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடைப் பற்களை கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாக துலக்க வேண்டும்; நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். தேவையான அளவு பற்பசை போதுமானது; கரி, உப்பு, மண், செங்கல்தூள் , சாம்பல், உமிக்கரி  போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.

பல் துலக்கியை பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியை பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது. பல்லை மட்டுமல்லாமல், ஈறுகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஈறுகளில் ரத்தக் கசிவு, மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறி. பல் ஈறுகள் பாதிக்கப்பட்டால், இதயம், குழந்தையின்மை, எலும்பு நோய்கள், குறைப்பிரசவம் போன்ற பிரச்னைகளுக்கு காரணமாக அமையும். அதுமட்டுமல்ல; வாயிலுள்ள பற்கள் தேய்ந்து விட்டால், அக்கூர்மையான பல், நாக்கிலோ அல்லது உள் கன்னத்திலோ குத்தினால் புண் ஏற்படும். 
இதை பல் மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால், ஆபத்தில் கொண்டு விடும்.