இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு ஞானஸ்நானம்.. களை கட்டிய பக்கிங்ஹாம் அரண்மனை..
இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியரின் பெண்குழந்தை சார்லட் எலிசபெத் டயானாவுக்கு இன்று ஞானஸ்நானம் வழங்கப்படுகிறது. கடந்த மே மாதம் 2 ஆம் தேதி தமது இரண்டாவது குழந்தையாக லண்டன் செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் பெண்குழந்தையை பெற்றெடுத்தார் கேத் மிடில்டன். இளவரசர் வில்லியம்ஸின் தாயார் டயானா நினைவாக குழந்தைக்கு சார்லட் எலிசபெத் டயானா என பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் குழந்தைக்கு ஞானஸ்நானம் வழங்கும் விழா இங்கிலாந்தின் நார்ஃபோக்கில் உள்ள செயின்ட் மேரி மக்டலின் தேவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேவாலயத்தில் தான் மறைந்த இளவரசி டயானா ஞானஸ்நானம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி விழாவினை தலைமையேற்று நடத்துவது மகிழ்ச்சிக்குரியது என்று கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பேராயர் ஜஸ்டின் வெல்பியே சார்லட்டின் சகோதரரான குட்டி இளவரசர் ஜோர்ஜுக்கும் ஞானஸ்நானம் வழங்கினார்.